Last Updated:
CSK | தோனி மீண்டும் சிஎஸ்கேயின் கேப்டன் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி கடைசியாக சென்னை அணியின் கேப்டனாக இருந்தார். அந்த சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து 2024ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். அதில் இருந்து மைதானத்தில் தனது பங்களிப்பை குறைத்துக் கொள்ளத் தொடங்கினார் தோனி.
கடந்த சீசனில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதே சோகம் தற்போது வரை தொடர்கிறது என்றால் அது மிகையாகாது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் தோல்வியை கண்டு சென்னை அணி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

சென்னை அணியின் இத்தகைய செயல்பாட்டை துளியும் எதிர்பாராத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேப்டன் ருதுராஜ் குறித்தும் இன்னும் சில வீரர்கள் குறித்தும் வசைபாடத் தொடங்கினர். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். முழங் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியதாகவும், வரும் போட்டிகளில் தோனியே அணியை வழிநடத்துவார் என்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்தார்.
Also Read: IPL 2025-ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 Gen-Z வீரர்கள்.. லிஸ்ட் இதோ!
தோனி மீண்டும் சிஎஸ்கேயின் கேப்டன் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. ஒரு புறம் ருதுராஜ் கெய்க்வாட் விலகலை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தாலும், மறுபுறம் மீண்டும் தோனியை கேப்டனாக பார்ப்பதை நினைத்து சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேப்டனாக நியமிக்கப்பட்ட கையோடு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் நிலையில், இதுவரை விட்டதை எல்லாம் இந்த ஆட்டத்தில் சென்னை அணி பிடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அல்லது சோகம் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
April 11, 2025 8:07 AM IST


