Last Updated:
குஜராத் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் +1.413 நெட் ரன் ரேட்டை பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று புதன்கிழமை நடந்த லீக் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 23 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான்-குஜராத் அணிகள் புதன்கிழமை மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்த நிலையில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட புகாரில் சஞ்சு சாம்சனுக்கு 24லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்புத் தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட புகாரில் ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் முறையில், 12 லட்சம் ரூபாய் ராஜஸ்தான் அணிக்கும், அணி வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
ஐபிஎல் தரவரிசையை பொருத்தளவில் குஜராத் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் +1.413 நெட் ரன் ரேட்டை பெற்று முதலிடத்தில் உள்ளது. டெல்லி, ஆர்சிபி அணிகள் முறையே 2 மற்றும் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளன.
பஞ்சாப் அணி 4 ஆம் இடத்திலும், லக்னோ 5 ஆம் இடத்திலும், கொல்கத்தா 6 ஆவது இடத்திலும் உள்ளன. 7 முதல் 10 ஆம் இடங்களை ராஜஸ்தான், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பிடித்துள்ளது.
இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
April 10, 2025 5:16 PM IST


