Last Updated:
12B படத்தில் வரும் காமெடி போல, ‘Excuse me’ என்ற வார்த்தை மகாராஷ்டிராவில் ஒரு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ‘எக்ஸ்கியூஸ் மீ’ எனக் கூறிய பெண்ணை மராத்தி மொழியில் பேசுமாறு கூறி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திடீர் தாய்மொழிப் பற்று தாறுமாறு தாக்குதல் சம்பவத்தில் முடிந்தது எப்படி?.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற பெண்களை வழிமறித்து மராத்தியில் பேசுமாறு வலியுறுத்திய கும்பல், ‘எக்ஸ்கியூஸ்மி’ என ஆங்கிலத்தில் பேசிய ஒரே காரணத்துக்காக சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் மீதான தாக்குதல் சம்பத்தின் முழுமையான பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லியில் இரண்டு பெண்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கையில் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற பெண் குடியிருப்பு நுழைவாயிலை நெருங்கியதும் இளைஞர் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார். அவர்களிடம் இனிமேல் மராத்தி மொழியில் மட்டும் தான் பேச வேண்டும் என அந்த இளைஞர் வலியுறுத்தியிருக்கிறார்.
அதற்கு அந்த பெண்களில் ஒருவர் தன்னை மன்னியுங்கள் என்ற அர்த்தத்தில் “எக்ஸ்கியூஸ்மீ” என்று கூறியிருக்கிறார். அதை புரிந்து கொள்ளாத அந்த இளைஞர் ஆத்திரமடைந்து, “எக்ஸ்கியூஸ்மீ என்பதை மராத்தியில் சொல்லத் தெரியாதா? உனக்கு” என தகராறு செய்திருக்கிறார். இதனால் இருதரப்புக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞருடன் மேலும் சிலர் சேர்ந்து கொள்ள, இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் கையை முறுக்கியிருக்கிறார் அந்த இளைஞர். பெண்ணின் கையில் 9 மாத கைக்குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் இரு பெண்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
“‘எக்ஸ்கியூஸ் மீ’ என்பது மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு பொதுவான வார்த்தையாகும். அது ஒரு தவறு எனக் கூறி கும்பலாக வந்து அடிதடி தாக்குதலில் ஈடுபட்டது தேவையற்றது” என பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது மோசமான தாக்குதல் சம்பவம் குறித்து விஷ்ணு நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் வங்கிகளில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மராத்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று கோரி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தொண்டர்கள் சமீபத்தில் ஒரு போராட்டத்தைத் தொடங்கினர். இந்த கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு வங்கிக் கிளைகளுக்கும் சென்று ஊழியர்களை மராத்தியில் பேசுமாறு வலியுறுத்தி வந்துள்ளனர். இது குறித்து வங்கிகளுக்கான சங்கங்கள் சார்பில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு வலுக்கவே தாக்கரே தனது தொண்டர்களை போராட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தற்போது, மராத்தியில் பேசவில்லை எனக் கூறி ஒரு பெண் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 10, 2025 6:53 AM IST
“எக்ஸ்கியூஸ் மீ” என கூறியது ஒரு குத்தமா?.. மராத்தியில் பேச சொல்லி இரு பெண்களை அடித்து உதைத்த கும்பல்!


