3 நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில், வெளிநாட்டு தலைவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
இதனையடுத்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவத் துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்ததமும் கையெழுத்தானது.
மேலும் இலங்கை அரசின் உயரிய விருதான மித்ரா விபூசன விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் பிரதிநிதிகளை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
The meeting with leaders of Indian Origin Tamil (IOT) was fruitful. The community constitutes a living bridge between the two countries for over 200 years. India will support construction of 10,000 houses, healthcare facilities, the sacred site Seetha Eliya temple and other… pic.twitter.com/5A2VDDjnM1
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
அப்போது இலங்கை தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலமாக இருப்பதாக மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இதையும் படிங்க – “மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – பிரதமர் மோடி
மேலும் இலங்கையில் தமிழர்கள் பகுதியில் கட்டப்படும் 10 ஆயிரம் வீடுகள், மருத்துவ கட்டிடங்கள், சீதை கோயில் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா உதவும் என்று உறுதி அளித்தார்.
இலங்கை சென்ற பிரதமர் மோடி, கொழும்புவில் தமிழ் சமூகத்தினரை சந்தித்து உரையாடினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம் எனத் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்ததாகவும், தனிப்பட்ட முறையில் அவர்கள் இருவரும் தனக்கு தெரிந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான தமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதாகவும், எனது பயணத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும், முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஜெய சூர்யா, அரவிந்த டி சில்வா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
April 05, 2025 8:35 PM IST
இலங்கையில் தமிழர்களை சந்தித்த பிரதமர் மோடி.. 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதி

