Last Updated:
இப்போட்டியை முன்னிட்டு மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள், சிற்றுந்துகள் (Shuttle service) இயக்கிட உள்ளதா
“சென்னை எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் 2025 மார்ச் 23-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவரும் பார்வையாளர்கள், தங்களது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்” என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- சென்னை எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் 2025 மார்ச் 23-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்கள், தங்களது நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம். இப்போட்டியை முன்னிட்டு மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை (Shuttle service) இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் 2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23 முதல் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி நாளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், Chennai Super Kings Cricket Limited நிறுவனத்திடம் உரிய பயணக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு, மா.போ.கழகம் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.
பார்வையாளர்கள் தங்களது நுழைவுச் சீட்டை நடத்துனரிடம் காண்பித்து, குளிர்சாதன பேருந்துகளை தவிர்த்து, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கான சிறப்பு பேருந்துகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும். எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு 500 மீட்டர் அகவையில் உள்ள அண்ணாசதுக்கம் பேருந்து நிலையம், சென்னை பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம் மற்றும் அண்ணாசாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் உள்ள இடங்களில் இருந்து போட்டி முடிந்த பின்பும், தமது இருப்பிடத்திற்கு செல்ல மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வசதிகளை செய்துள்ளது.
மேலும், அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை முதல் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்கப்படும். எனவே, பார்வையாளர்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 22, 2025 12:17 PM IST


