இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்டினல் எனப்படும் தனித் தீவில் சென்டினிலீஸ் எனும் பாதுகாக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பு ஏதுமின்றி வாழ்ந்து வரும் மக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த தீவுக்கு வெளி நபர்கள் யாரும் செல்லக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மைகாயிலோ விக்டோரோவைச் பொல்யாகோவ் (வயது 24) என்ற நபர் கடந்த மார்ச் 26 அன்று அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையருக்கு சென்றுள்ளார். பின்னர், கடந்த மார்ச் 29 அன்று அதிகாலை 1 மணியளவில் குர்மா தெரா கடல் கரையிலிருந்து தனது படகில் தேங்காய்கள் மற்றும் ஒரு கேன் கோலா குளிர்பானத்துடன் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவை நோக்கிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் அந்த தீவின் வடக்குப் பகுதியைச் சென்றடைந்த அவர் தனது தொலைநோக்கியின் மூலமாக அந்த தீவை ஆய்வு செய்து தனது கேமராவில் விடியோ பதிவு செய்துள்ளார். சுமார் ஒரு மணிநேரம் அந்த தீவிலயே விசில் அடித்து பழங்குடியின மக்களின் வருகைக்காக காத்திருந்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் அங்கு வரவில்லை எனக் கூறப்படுகின்றது.

