Last Updated:
முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. மே 25 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் மோதுகின்றன. இதையொட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் முக்கிய வீரர்கள் பலர் அணி மாறியுள்ளார்கள். இதேபோன்று கேப்டன்ஷிப்பும் சில அணிகளில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் நடப்பு சீசன் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியது. இதையொட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரமாண்ட விழா மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து பாடகி ஷ்ரேயா கோஷல், கூமர், ஹர் மைதான் பதே, ரங்தே பசந்தி உள்ளிட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக அவர் வந்தே மாதரம் பாடலை பாட அவருடன் மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பின்னால் பாடினர்.
அதைத் தொடர்ந்து நடிகை திஷா பதானியின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு அற்புதமாக நடமாடிய திஷா பதானி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இதையடுத்து டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.
March 22, 2025 7:48 PM IST


