Last Updated:
ரஷ்யா, சீனா மற்றும் அதன் நட்பு நாடுகள், அமெரிக்கா டாலர்கள் மூலம் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு உயரும் என சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை ஒரு சவரன் 67 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதால், குறைந்த வருவாய் உள்ளவர்கள் தங்கம் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை ஏற்றம் குறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியபோது, “இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,150ஆக இருந்தது. அதுவே ஒரு சவரன் ரூ. 57,200ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.67,400ஆக உள்ளது. அதாவது 3 மாதங்களில் ரூ.10,000 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை மேலும் உயரும் என நாம் எதிர்பார்க்கலாம். அமெரிக்க அதிபரின் திடீர் முடிவுகள் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் இந்தியா – சீனா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும் புதின் மீது தான் கோபமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஈரானும் சில நாட்களாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என கூறி வருகிறது. இதனால் ரஷ்யா, சீனா மற்றும் அதன் நட்பு நாடுகள், அமெரிக்கா டாலர்கள் மூலம் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
ஆகையால் அமெரிக்கா டாலர்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்து, டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. உலக அளவில் ஏற்படும் பொருளாதார நிலையின்மை காரணமாக, முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு உயர உள்ளது. இதற்கு மாற்றுக்கருத்தே இல்லை” எனக் கூறினார்.
March 31, 2025 7:12 PM IST


