Last Updated:
சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது. சிஎஸ்கே 8-வது இடத்தில், ராஜஸ்தான் 10-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-உடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கே, 2வது போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் தோல்வியடைந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்று வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இதனால், யார் வெற்றிப் பாதைக்கு திரும்புவது என்பதில் சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே போட்டி நிலவுகிறது. சென்னை அணியில் இன்று பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி கடந்த போட்டிகளில் ஜொலிக்காமல் இருப்பதால் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கலாம். கேப்டன் ருத்துராஜ் மீண்டும் ஒபனிங் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, மாலை 3.30 மணியளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டும் ஆடி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் தோல்வியை தழுவிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் தோல்வியே சந்திக்காமல் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. லக்னோ, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை அணி 2 புள்ளிகள் உடன் ரன்ரேட் அடிப்படையில் 8 ஆவது இடத்திலும் புள்ளிகள் ஏதும் பெறாத மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முறையே 9 மற்றும் 10 இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் இந்த புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
March 30, 2025 8:03 AM IST


