மத்தியப் பிரதேசத்தின் மைஹார் பகுதியில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரையிலான 9 நாள்களுக்கு நவராத்திரி பண்டிகையை ஒட்டி முட்டை, இறைச்சி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதேபோல, மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களான போபால், இந்தூர் பகுதிகளிலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஹிந்து, ஜெயின், சிந்தி, புத்த மத பண்டிகைகளை முன்னிட்டு 4 நாள்களுக்கு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
குடி பத்வா மற்றும் சந்த் (மார்ச் 30), ராம நவமி (ஏப்ரல் 6), மஹாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 10), புத்த பூர்ணிமா (மே 12) ஆகிய பண்டிகை நாள்களில் பாஜக நிர்வாகத்தின் கீழுள்ள இரு நகரங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் தனித்தனியே இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நவராத்திரியை முன்னிட்டு இந்தூர் நகரம் முழுவதும் 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க ஹிந்து அமைப்பான ஹிந்து ராஷ்டிர சங்கதன் வலியுறுத்தியுள்ளது.
”நவராத்திரி நாள்களில் இறைச்சிக் கடைகள் திறந்திருப்பதைக் கண்டால் எங்கள் அமைப்பினர் அவற்றை மூடுவார்கள்” என அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் சிரோத்கர் மிரட்டியுள்ளார்.

