Last Updated:
உயர் நீதிமன்றங்களில் 2018க்குப் பின் நியமிக்கப்பட்ட 715 நீதிபதிகளில் 77 சதவிகிதம் பேர் உயர் சாதியினர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றங்களில், 2018ஆம் ஆண்டுக்குப் பின் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில், 77 சதவிகிதம் பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் மனோஜ் குமார், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், இடஒதுக்கீடு பிரிவினர் எவ்வளவு பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், 2018-ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றங்களில் 715 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில், 22 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றும், 16 பேர் பழங்குடியினர் என்றும், 89 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், 37 பேர் சிறுபான்மையினர் எனவும் கூறியுள்ளார். அதேநேரத்தில், உயர் சாதியினர் 551 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது 77.06 சதவிகிதமாகும்.
மேலும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களுக்கு பரிந்துரை அளிக்கும் போது, இடஒதுக்கீடு பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர் குறித்து உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
Delhi,Delhi,Delhi
March 27, 2025 11:36 AM IST


