Last Updated:
மத்திய அரசு SSA நிதியை விடுவிக்காதது நியாயமல்ல என நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு உடனடியாக நிதி வழங்க பரிந்துரை செய்துள்ளது.
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் அல்ல என்று நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மாநிலங்களவையில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரத்து 152 கோடி, கேரளாவுக்கு 859 கோடி, மேற்கு வங்கத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதாகவும், இது நியாயமில்லாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் இலக்குகளை எட்டும் விதமாக பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு முன்னதாக சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காக இந்த திட்டத்தை புறக்கணிக்க முடியாது என்றும் நிலைக்குழு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மாணவர் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கும் நிலையில், நிதி பற்றாக்குறை மற்றும் SSA நிதிகளை விடுவிப்பதில் தாமதம் போன்றவற்றால் இந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர்களின் முன்னேற்றங்கள் தடைபட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளது.
சம்பளம், ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு பராமரிப்பு போன்றவற்றில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள SSA நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
Delhi,Delhi,Delhi
March 27, 2025 6:46 AM IST
“தமிழ்நாட்டுக்கு நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் அல்ல” – நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி


