Last Updated:
சென்னை அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3-ஆவது ஆட்டமாக இரு அணிகளும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பௌலிங்கை தேர்வு செய்தார்.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். 4 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே கலீல் அகமது வேகத்தில் சிவம் துபேயிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கெல்டன் 13 ரன்கள் எடுத்திருந்தபோது கலீல் அகமது பந்துவீச்சில் போல்டாகி ஆட்டம் இழந்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜாக்ஸ் 11 ரன்கள் எடுத்தார். இதன்பின்னர் இணைந்த சூரியகுமார் யாதவ், திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடியது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சூர்யகுமார் யாதவ் 29 ரன்கள் எடுத்திருந்தபோது நூர் அகமது சுழலில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ராபின் மென்ஸ் 3 ரன்களிலும், திலக் வர்மா 31 ரன்களிலும் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.
நமன் திர் 17 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் தலா இரண்டு சிக்சர், பவுண்டரியுடன் 15 பந்துகளில் தீபக் சாகர் 28 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
March 23, 2025 9:29 PM IST


