Last Updated:
IPL 2025 | தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங், விக்னேஷ் புத்தூரின் 3 விக்கெட்டுகள், ரோகித் சர்மாவின் டக் அவுட் சாதனை ஆகியவை சிஎஸ்கே vs மும்பை போட்டியில் முக்கியமானவை.
தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கும், அறிமுக வீரரான விக்னேஷ் புத்தூரின் பந்துவீச்சும் நேற்றைய போட்டியில் கவனத்தை ஈர்த்தன.
நூர் அகமது வீசிய பந்தை தவற விட்ட சூர்யகுமாரை, தனது மின்னல் வேக ஸ்டெம்பிங்-ஆல் தோனி வெளியேற்றினார். ஐபிஎல்-இன் அதிக வயதான வீரராக உள்ள தோனி, பூஜ்ஜியம் புள்ளி ஒன்று இரண்டு வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்து மிரள வைத்தார்.
இதனிடையே, சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளரான நூர் அகமது, சரியான நேரத்தில் மும்பை அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதே போல, ஐபிஎல்-இல் தனது அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளரான விக்னேஷ் புத்தூர் பலரின் கவனத்தை ஈர்த்தார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட விக்னேஷ் புத்தூர், ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா என முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். கேரளாவைச் சேர்ந்த 23 வயது வீரரான விக்னேஷை, போட்டி முடிந்த பின்னர் தோனி பாராட்டினார்.
நேற்று தனது 258-ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா, அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். 264 போட்டிகளில் விளையாடிய தோனி முதல் இடத்தில் உள்ளார்.
நேற்றுடன் சேர்த்து ஐபிஎல் போட்டியில் 18-ஆவது முறை டக் அவுட் ஆன ரோகித், அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். மேலும், தொடர்ந்து 13-ஆவது ஆண்டாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 24, 2025 6:44 AM IST


