செய்திகளத்துல என்னோட முதல் விளையாட்டு தொடர்பான செய்தியைச் சேகரிக்க போனது அன்னைக்கு நடந்த மேட்சுல தான். சேப்பாக்கத்துக்கு ரொம்ப தூரமா நின்னு பார்த்தவன் தான். தூரம்னா, வாலாஜா சாலையிலையோ, அண்ணா சாலையிலோ இருந்து இல்ல… 600 கிலோ மீட்டர் தாண்டி திருநெல்வேலில இருந்து பார்த்தவன். நிறைய மோமென்ட்ஸ் ஷேர் பண்ணிக்க நினைச்சேன், இன்னைக்கு, இது CSK ரசிகர்களுக்கு முக்கியமான இடம். ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனியின் தலைமை நிலையம். குறிப்பா, அறிமுக வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அழகாக தொடங்கி வைக்கக்கூடிய இடம். IPL, டெஸ்ட், உலக கோப்பைன்னு – திருவிழா நகரம் சேப்பாக்கம்னு சொன்னாலுமே, அது மிகையானது இல்ல.
1986-ல் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச், சேவாக், சச்சின் மாதிரியான வீரர்களுடைய கிரிக்கெட் பயணத்துக்கு சேப்பாக்கத்துக்கான இடம் ரொம்பவே பெருசு. சரி, டெஸ்ட், T20ன்னு நிறைய போட்டிகள் நடந்தாலும், பரீட்சையானது என்னவோ IPL தான். அதுவும் சென்னை SUPER KINGS ஓட மஞ்சள் நிற கோட்டையாவே மாறி விட்டுச்சு. பொதுவாக உருள திருவிழாக்கள் அதிகமாக நடக்கும்.. ஒவ்வொரு வருஷமும் பார்க்கும் திருவிழா தான் அதே கடை, அதே ராட்டினம் தான் ஆனாலும் திருவிழா, அந்த VIBES… எல்லாரும் ஒன்னுக்கூடுறதுன்னு நிறைய விஷயம் அதுக்குள்ள அடங்கும்… ஊருல திருவிழாவை போலவே சென்னையிலையும் ஒரு விஷயம் நினைவில் இருக்கும் இல்லையா… அப்படி IPL சீசன் முழுக்கவே இருக்கும். ஏன் சொல்றேன்னா, மேட்ச் நடந்தது ஞாயிற்றுக்கிழமை சென்னை கொஞ்சம் அமைதியா வெறிச்சோடி இருக்கும் நாள். ஆனா சரியாக ஒரு ரெண்டு மணிக்கு அண்ணா சாலைக்கிட்ட போறேன்.
அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை வரைக்கும் போற வழி முழுக்கவே CSK T-SHIRT, WHISTLE, CAP, FLAG எல்லாமே விற்கும் கடைகள் நிறைந்திருந்தது. திருவிழா நுழைவோட்ட தொடக்கம் எப்படியோ, அப்படித்தான் இருந்துச்சு. வாங்குற ரசிகர்களை பொறுத்தவரை CSK VS MI யாரு ஜெயிப்பாங்கிற excitement… யாரு ஜெயிக்கிறாங்களோ இல்லையோ, போட்ட முதல் பணத்தை திருப்பி எடுக்குற அளவுக்கு வித்துடுவோமங்கிற மனநிலையோட சாலையோர வியாபாரிங்க இருந்தாங்க… ஒரு பரபரப்பு நிறைந்த இடமாவே இருந்துச்சு. எல்லா கடைகளிலும் அவங்களோட குழந்தைகள் தான் வியாபாரம் பார்த்துட்டு இருந்தாங்க. வீட்டில் அப்பா, அம்மா நிலைமையை புரிந்து அந்த குழந்தைகள் செய்யும் வியாபாரமும் சரி, பேரம் பேசும் விதமும் சரி, முக்கியமாக பலரும் கவனித்தை ஈர்த்த விஷயம் அது.
விசில் விற்கும் குழந்தைகள்: விசில் விற் குற குழந்தைகள் பேசும் அழகுகாவே பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர் ஒருவரும் ஒரு விசில் வாங்கினார். அதைப் பார்த்த இன்னும் இரண்டு குழந்தைகள் அவரிடம் வந்து நின்றது, அவரும் தட்டாமல் 2-3 விசில் வாங்கியிருப்பார். அவர்களுக்கு நடுவிலே நடந்த உரையாடல்கள் அவ்வளவு அழகு. வியாபாரிகளாக வந்த ரசிகர்களின் குழந்தைகளிடம் பேசும் போது, “அண்ணா, தோனி ஜெயிப்பாரு… CSK ஜெயிக்கும்” சொல்லும் போது வர்ற சிரிப்பா இருக்கட்டும். “தோனின்னா யாருன்னு கேட்டதும், அதோ அவர்!” அப்படின்னு T-shirt நோக்கி கை காட்டினார்கள். விஜய் சொல்ற மாதிரி தான், “பிடிச்சாரு இல்ல, தோனி குழந்தைகள்லாம் பிடிச்சுட்டே இருக்காரு”ன்னு தான் சொல்லனும்.
கொரோனா காலத்துல பெரிய பெரிய கடைகள் மூடினாலும், நம்ம வீட்டு அருகே உள்ள பலசரக்கு கடைகள் தான் நமக்கு உதவின. அதேபோல், இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அதைச் சுற்றி இருக்கும் சுண்டல் கடை, டீ கடை, ஜூஸ் கடை எல்லாமே… அங்க விருப்பமான உணவுகளை சாப்பிட முடியாது, ஆனா நாமே சாப்பிட தவிர்த்த உணவுகளெல்லாம் நமக்கு favorite-ஆ மாறும். ரசிகர்களை நம்பி வீரர்கள் நம்பி மேட்ச் ஆடுறத விட, ரசிகர்களை நம்பி கடை விரிச்ச வியாபாரிகளின் நம்பிக்கை ரொம்ப பெருசு. இந்த வியாபாரம் பல தேவைகளை நம்பியும் இருக்கு. குறிப்பா, அங்க தன்னோட குழந்தையை தர்பாயில படுக்கவைத்து, ரோட்டுல ஓடி ஓடி வியாபாரம் செய்த பெற்றோர்களையும் பார்த்தோம்.
இந்த கன்னத்தில் tattoo போடுறது match நடக்கும் போது நடக்கும் ரொம்ப வழக்கமான விஷயம். குடும்பமாக மேட்ச் பார்க்க வந்தவர்கள், குடும்பமாவே tattoo போட்ட சம்பவங்களுமே நடந்தது. மேட்ச் ஸ்டார்ட் ஆகப்போற அரை மணி நேரத்துக்கு முன்னாடியும், சில ரசிகர்கள் பரபரப்பாக இருந்தாங்க. அந்த ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல், டிக்கெட் தேடி அலையும் ரசிகர்கள் தான். “Bro, டிக்கெட் இருக்கா?” எப்படியாவது இந்த மேட்ச்சைப் பார்த்திருக்க மாட்டோமா? தோனி தரிசனம் கிடைக்காதேங்கிற ஏக்கமும் அவர்களின் கண்களில் தெரிந்தது. வருடந்தோறும் சேப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகம். இந்த வருடம் அதிகமான ரசிகர்கள் ஸ்டேஷனில் குவிந்திருந்தார்கள். தன்னோட team மேல, தனக்கு பிடித்த ஆஸ்தான வீரர் மேல ரசிகர்கள் காட்டும் அன்பு அளப்பரியது. இவ்வளவு பாசமுள்ள, அன்பு நிறைந்த ரசிகர்கள் CSK-க்கும், DHONI-க்கும் கிடைச்சது பெரிய விஷயமாகத்தான் பார்க்கணும்!
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 25, 2025 4:19 PM IST

