ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், தங்களது ஆஸ்தான நாயகர்களை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கையில், ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி வருகின்றனர். அதற்காக எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக இருக்கும் ரசிகர்களை குறிவைத்து மோசடி கும்பல் வலை விரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், பிளாக் டிக்கெட் கும்பலை தட்டித் தூக்கியுள்ளது. நடந்தது என்ன?
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட், ஆன்லைன் மூலம் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தன. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் SOLD OUT ஆகின. டிக்கெட் கிடைக்காத வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், எப்படியாவது சென்னை – மும்பை போட்டியை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், மைதானத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
எவ்வளவு பணம் கொடுத்தேனும் கள்ளச் சந்தையில் டிக்கெட் கிடைத்தால் அதை வாங்கிவிட வேண்டும் என்றும் துடித்துள்ளனர். அவர்களை டார்கெட் செய்து, பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்பவர்கள் வலைவிரித்து வந்துள்ளனர். இது தொடர்பான ரகசிய தகவல் திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு பறந்துள்ளது. உடனே, வண்டி ஏறி சேப்பாக்கம் விரைந்து வந்த போலீசார், ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் உலாவிய பிளாக் டிக்கெட் வியாபாரிகளை வலைவீசி தேடினர்.
அப்போது, கண்ணில்பட்ட கும்பலை போலீசார் தட்டித் தூக்கினர். இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிந்து, 9 பேரை கைது செய்தனர். இதேபோன்று, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 34 டிக்கெட்டுகள் மற்றும் 53 ஆயிரத்து 530 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் குறைந்த விலையிலான 1,700 ரூபாய் டிக்கெட்டை, 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read | டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா? மோகன்லாலின் ‘எம்புரான்’ மிரட்டல் சாதனை!
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக, மொத்த டிக்கெட்டில் விளம்பரதாரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் டிக்கெட்டாக 15 சதவீதம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கேலரிக்கும் குறிப்பிட்ட அளவு டிக்கெட் ஸ்பான்சர்களுக்கு சென்று விடுகிறது. அந்த டிக்கெட்டை விளம்பரதாரர்களிடம் இருந்து வாங்கும் ஒரு சிலர், பிளாக் டிக்கெட்டில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காத கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், கள்ளச் சந்தையில் விற்கப்பட்டும் டிக்கெட்டுகளை, 5 மடங்கு அதிக பணம் கொடுத்து வாங்குவதாக கூறப்படுகிறது. இவர்களையே குறி வைத்து பிளாக் டிக்கெட் கும்பல் கல்லா கட்டியுள்ளது. இனி வரும் போட்டிகளின் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 25, 2025 7:32 AM IST

