Last Updated:
இது அவுட் தான் என்று ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பேட்டால் ஸ்டெம்பை தட்டினார். இதில் பெய்ல் கீழே விழுந்த நிலையில் அவுட் கொடுக்கப்படாததால் சர்ச்சை ஏற்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.
இந்த மேட்சில் டாஸ் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக குவின்டன் டீ காக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் ஹேசல்வுட் வீசிய பந்தில் குவிண்டன் டீ காக் கொடுத்த கேட்சை சுயஸ் சர்மா தவறவிட்டார். இதன் பின்னர் 5-ஆவது பந்தில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து குவின்டன் டி காக் வெளியேறினார்.
இதன் பின்னர் இணைந்த கேப்டன் அஜிங்யா ரஹானே, சுனில் நரேன் இணை ஆர்சிபி பந்துவீச்சை வெளுத்தெடுத்தது. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த போட்டியின் போது ஏழாவது ஓவரை ராசிக் சலாம் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்து சுனில் நரேனின் தலைக்கு மேல் சென்றபோது அம்பயர் அதற்கு வைட் கொடுத்தார்.
அப்போது சுனில் நரேன் பேட் தவறுதலாக ஸ்டம்ப் மீது பட்டு அதிலிருந்து பெய்லும் கீழே விழுந்தது. இதனை தாமதமாக உணர்ந்த ஆர்சிபி வீரர்கள் அவுட்டிற்காக அப்பீல் செய்தனர். ஆனால் பந்து ஏற்கனவே விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவின் கைக்குள் சென்றதால் இதற்கு அவுட் கொடுக்க முடியாது என நடுவர் மறுத்துவிட்டார். இருப்பினும் இது அவுட் தான் என்று ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
March 22, 2025 9:06 PM IST


