Last Updated:
உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க, அப்பாவிகள் 3 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இந்தியாவை சேர்ந்த வழக்கறிஞர் ஜான் பால் வாதிட்டார்.
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த ராஜூ முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்கந்தன் ஆகிய 3 பேரும் சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வந்தனர். இவர்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம், லெஜன்ட் அக்வாரிஸ் என்ற சரக்கு கப்பலில், 106 கிலோ “கிரிஸ்டல் மெத்” என்ற போதைப் பொருளை கடத்திச் சென்றதாக, இந்தோனேசியா கடல் எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் கடத்தலில் தங்களுக்கு தொடர்பில்லை என 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், கப்பலின் கேப்டனை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு இந்தோனேசியா நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர் குறுக்கு விசாரணையை தவிர்க்கும் வகையில், நேரில் ஆஜராகாமல், வீடியோ கால் மூலம் குறைந்த நேரமே ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இது, கைதான 3 பேருக்கும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அவர்களுக்கு மரணத் தண்டனை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read: George Foreman: குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்…
இந்நிலையில், உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க, அப்பாவிகள் 3 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இந்தியாவை சேர்ந்த வழக்கறிஞர் ஜான் பால் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் பதிவு செய்துக் கொண்ட நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
March 22, 2025 2:15 PM IST


