Last Updated:
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பேராசிரியர் ரஜ்நீஷ் குமார் 30 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு. 65 ஆபாச வீடியோக்கள் மீட்கப்பட்டன. காவல்துறை தீவிரமாக தேடிவருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கல்லூரியில் புவியியல் பேராசிரியராக ரஜ்நீஷ் குமார் (54) என்பவர் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். இவர் அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்திருக்கிறார். அப்படி இவர் 30 மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். தற்போது இந்தச் சம்பவம் வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்திற்கு பெயர் அற்ற ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், கல்லூரியின் பெயரை குறிப்பிட்டு, அதில் ‘புவியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிவரும் ராஜ்நீஷ் குமார் ஒரு கொடூரமானவர். இவர், தேர்வு மற்றும் வேலை வாய்ப்பில் உதவுவதாகக் கூறி கடந்த பல வருடங்களாக மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவருகிறார். அவர் மீது பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அளவிற்கு அவர் இங்கு அதிகாரமிக்க நபராக இருந்துவருகிறார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், அவர் தொடர்பான சில காணொளிகளும் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மீது நடவடிக்கை எடுத்த தேசிய மகளிர் ஆணையம், உத்தரப்பிரதேசம் காவல்துறைக்கு உத்தரவிட அவர்கள் ரஜ்நீஷ் குமார் குறித்து விசாரணையைத் துவக்கினர். அதேபோல், ரஜ்நீஷ் குமாருக்கு காவல்துறை சம்மன் அனுப்பினர். உடனே ரஜ்நீஷ் குமார் தனது போனில் இருந்த காணொளிகளை அழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கைப்பேசியை பறிமுதல் செய்த காவல்துறை, தடயவியல் துறையின் உதவியுடன் அவர் அழித்த காணொளிகளை மீட்டுள்ளனர். அதில், 65 காணொளிகளைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் ஏராளமான காணொளிகள் மாணவிகளின் காணொளிகளாக இருக்கின்றன. மேலும், சில காணொளிகளை ஆபாச தளங்களிலும் பதிவேற்றம் செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : “சர்ச்சை நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்படவில்லை” – உச்சநீதிமன்றம் விளக்கம்!
மேலும் காவல்துறை விசாரணையில், கடந்த 18 மாதங்களில் மட்டும் ரஜ்நீஷ் குமார் மீது ஐந்து முறை புகார் வந்திருப்பதும், அதனை கல்லூரி நிர்வாகம் விசாரிக்காமல் அவரை அதில் இருந்து காப்பாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தபிறகு ரஜ்நீஷ் குமாரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்துவந்த அதே சமயத்தில் ரஜ்நீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவரைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய எஸ்.பி. சிரஞ்சீவ் நாத் சின்ஹா தெரிவிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கல்லூரி ஊழியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்திவருகிறோம். தலைமறைவாக உள்ள பேராசிரியரைப் பிடிக்கவும் தீவிரமாகத் தேடல் வேட்டையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. விரைவில் அவர் பிடிப்படுவார்” எனத் தெரிவித்தார்.
March 21, 2025 7:18 PM IST


