அமெரிக்காவின் 35-வது அதிபராக இருந்தவர் ஜான் எஃப் கென்னடி. 1963-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22-ஆம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் டல்லஸ் நகரில், சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கட்டடம் ஒன்றின் 6-வது மாடியில் மறைந்திருந்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் என்பவர் கென்னடியை சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. கென்னடியின் பாதுகாவலர்களால், ஆஸ்வால்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
ஆஸ்வால்ட் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் ஜாக் லியோன் ரூபி என்ற இரவு விடுதி உரிமையாளர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கென்னடி படுகொலை குறித்து விசாரித்த ஆணையம், ஆஸ்வால்ட் மட்டுமே குற்றவாளி என கூறியிருந்தது. ஆனால், இதனை பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஏற்க மறுத்தனர். இந்நிலையில் கென்னடி படுகொலை குறித்த 63,000 பக்க ஆவணங்களை வெளியிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை ஆணையம் கென்னடி கொலையில் ஒருவர் மட்டுமே ஈடுப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், சம்பவத்தின் போது இரண்டாவது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கென்னடி உயிரிழந்திருக்கக் கூடும் என ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கென்னடியின் வாகன அணிவகுப்புக்கு முன்னால் அமைந்திருந்த ஒரு புல்வெளி மேட்டிலிருந்து வந்த தோட்டா அவரை கொன்றிருக்கலாம் என ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் படுகொலை சம்பவத்திற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னர், ஆஸ்வால்ட் மெக்சிகோவின் சோவியத் யூனியன் மற்றும் கியூபா நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று வந்துள்ளார். இதனை CIA கண்டுபிடித்தபோதிலும் உரிய நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
நீதிபதி ஏர்ல் வாரன் ஆணைய கூற்றின் படி, ஆஸ்வால்ட்டை கொன்ற ஜாக் லியோன் ரூபி, கென்னடியின் கொலைக்கு பழிவாங்கியதாக கூறியது. ஆனால் புதிய ஆவணங்களில், ஜாக் லியோன் ரூபி பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், எனவே ஆஸ்வால்ட், பல பெரிய உண்மைகளை கூறுவதற்கு முன்னதாக ரூபியால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், 1962-ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 1963-ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடையே மெக்சிகோ சிட்டியில், சோவியத் யூனியன் மற்றும் கியூபா நாடுகளின் தூதரகங்களுக்கு இடையே நடந்த உரையாடல்களை CIA ஒட்டுக் கேட்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே கென்னடியின் படுகொலை குறித்து முன்கூட்டியே CIA-விற்கு தெரிந்திருந்ததா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
Also Read | மத்திய கல்வித்துறையை கலைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.. மாகாணங்களுக்கே அனைத்து உரிமையும்!
ஆவணங்களில் பொதிந்துள்ள மற்றொரு முக்கிய தகவல் CIA ஏஜெண்ட் கேரி அண்டர்ஹில் பற்றியது. கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் வாஷிங்டனிலிருந்து வெளியேறிய கேரி அண்டர்ஹில், தனது நண்பர் ஒருவரின் நியூஜெர்சி வீட்டில் தஞ்சம் புகுந்தார். கென்னடியுடன் முரண்பட்டிருந்த, CIA-வைச் சேர்ந்த சிறு குழுவினர் சார்பில் தான் அவர் கொல்லப்பட்டதாக தனது நண்பரிடம் அண்டர்ஹில் கூறியிருந்தார்.
2 மாதங்கள் கழித்து, கேரி அண்டர்ஹில் வாஷிங்டனில் தனது வீட்டில் துப்பாக்கி காயங்களுடன் இறந்து கிடந்தார். கென்னடியின் கொலையின் மர்மம், விலகாத புதிராகவே பல தசாப்தங்களாக நிலவி வருகிறது. தற்போது டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ராபர்ட் எஃப். கென்னடி, தனது மாமாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை விலக்குவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 21, 2025 7:25 AM IST

