Last Updated:
பாலியல் குற்றத்தைச் செய்வதற்கான “முயற்சி” மற்றும் “தயாரிப்பு” ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு பெண்ணின் மார்பகத்தைத் தொடுவது, பைஜாமா கயிற்றை அவிழ்ப்பது மற்றும் கால்வாயில் தள்ளிச் செல்ல முயற்சிப்பது ஆகிய செயல்கள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி எனக் கருதப்படாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் POCSO சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆகாஷ் சிறுமியின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து, ஒரு கால்வாய்க்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்த வழியாக சிலர் வந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை விட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம் இதை POCSO சட்டம் மற்றும் IPC பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை முயற்சி என்று கூறியது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இரண்டு ஆண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை ரத்து செய்து, குற்றத்தைச் செய்வதற்கான “முயற்சி” மற்றும் “தயாரிப்பு” ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருப்பதாகக் கூறியுள்ளது.
“இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சாட்சியங்கள் பாலியல் வன்கொடுமை முயற்சி என்பதை நிரூபிக்கவில்லை. பாலியல் வன்கொடுமை முயற்சி என்பதை நிரூபிக்க, அது தயாரிப்பு நிலையைத் தாண்டி, செயல் நிலையை அடைந்திருக்க வேண்டும் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். குற்றத்தைச் செய்வதற்கான தயாரிப்புக்கும் உண்மையான முயற்சிக்கும் உள்ள வித்தியாசம், எந்த அளவுக்கு அவர்கள் உறுதியாக இருந்தார்கள் என்பதைப் பொறுத்தது” என்று நீதிபதி மிஸ்ரா கூறினார்.
இதையும் படிக்க: தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக கோரிக்கை.. மக்களவை சபாநாயகர் அமைச்சருடன் தீவிர ஆலோசனை!
மேலும் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றியது.
தொடர்ந்து, “குற்றம் சாட்டப்பட்டவரின் செயலால் பாதிக்கப்பட்டவர் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக இருந்ததாக எந்த சாட்சியமும் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் முயன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிபதி கூறினார்.
March 20, 2025 12:41 PM IST
”மார்பை பிடிப்பதும், பைஜாமா கயிற்றை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி எனக் கருதப்படாது” – அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து


