Last Updated:
புவிஈர்ப்பு விசை இல்லாததால், மனித உடலில் தசை மற்றும் எலும்பு நிறை இழப்பைக் குறைக்க, விண்வெளி வீரர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
தற்போதைய நிலவரப்படி 2 விண்வெளி நிலையங்கள் உள்ளன. ஒன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து ஏற்படுத்தியுள்ள சர்வதேச விண்வெளி நிலையம். மற்றொன்று சீனாவின் தியாங்காங் (Tiangong) விண்வெளி நிலையம். சர்வதேச விண்வெளி நிலையம், 2000-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. சீனாவின் தியாங்காங், 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இதில், சர்வதேச விண்வெளி நிலையம், ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியது. ஆறு படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் 360 டிகிரி பார்வை கொண்ட ஜன்னல் ஆகியவை இதில் உள்ளன. ஏழு பேர் கொண்ட ஒரு குழுவினர் வினாடிக்கு ஐந்து மைல் வேகத்தில் பயணித்து, ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வருகிறார்கள். சில நேரங்களில் குழுவினர் மாறும் போது 7-க்கும் மேற்பட்டோர் நிலையத்தில் இருப்பார்கள்.
24 மணி நேரத்தில், விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவந்து 16 சுற்றுப்பாதைகளை உருவாக்கி, 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களைக் கடந்து செல்லும். 356 அடி நிளம் கொண்ட, சூரிய சக்தியால் இயங்கும் விண்வெளி நிலையத்தின் இறக்கைகள் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ்-ஐ விட நீளமானவை.
Also Read: கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.. சுற்றி துள்ளிக் குதித்த டால்பின்கள்.. நடந்தது என்ன?
புவிஈர்ப்பு விசை இல்லாததால், மனித உடலில் தசை மற்றும் எலும்பு நிறை இழப்பைக் குறைக்க, விண்வெளி வீரர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். மேலும், எட்டு விண்கலங்களை ஒரே நேரத்தில் விண்வெளி நிலையத்துடன் இணைக்க முடியும். பூமியிலிருந்து ஏவப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் ஒரு விண்கலம் விண்வெளி நிலையத்தை சென்றடையும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை, பூமியின் மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேரை கடக்கிறது. விநாடிக்கு சுமார் 8 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள், பூமி தொடர்பான லட்சக்கணக்கான புகைப்படங்களை எடுக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட கணினிகள் விண்வெளி நிலையத்தில் உள்ள அமைப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முன்னதாக, மிர் விண்வெளி நிலையம் செயல்பாட்டில் இருந்தது. அப்போதைய சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையம் 1986-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது. 15 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்த மிர் விண்வெளி நிலையம், 2001-ஆம் ஆண்டு கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் மூலம் செயலிழக்க செய்யப்பட்டது. அதன் பாகங்கள், பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்து நொறுங்கின.
March 19, 2025 7:23 AM IST
விநாடிக்கு 8 கிமீ வேகம்..16 சூரிய உதயங்கள்.. சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் எப்படி இருக்கும்?


