கடந்த மாதம், ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போதும், ‘இந்தப் போர் சீக்கிரம் முடிய வேண்டும்’ என்று தான் பேசியிருந்தார் ட்ரம்ப். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருந்தாலும், மீண்டும் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. உக்ரைன் உடனடி 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிகாரி குழு அங்கே சென்றது. அப்போது ஊடகத்தில் பேசிய புதின், ‘ரஷ்யா சமாதானத்திற்கு தயார்’ என்று சமாதான கொடியை பறக்கவிட்டிருந்தார். ஆனால், அவருக்கு இருக்கும் முக்கிய நிபந்தனை, ‘உக்ரைனை நேட்டோ படையில் இணைத்து கொள்ளக் கூடாது’. ட்ரம்ப்பிற்கும் இந்த நிபந்தனை பெருமளவு ‘ஓகே’ தான். அவரும் உக்ரைனை நேட்டோ படையில் இணைப்பதை விரும்பவில்லை. இதைவிட, அமெரிக்க நாட்டையே நேட்டோவில் இருந்து விலக்க பிளான் செய்துகொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் இந்தப் போர் நிறுத்த முயற்சி வெற்றி பெற்றால் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய பிளஸ்கள் தான். தொடர் போர், அதிக செலவுகள், உயிரிழப்புகள், பிற நாடுகள் விதித்த தடைகள் என ரஷ்யா பொருளாதாரத்தில் சற்று தடுமாறி தான் வருகிறது. இந்த நிலையில், இந்தப் போர் முடிவு பெற்றால் ரஷ்யா பொருளாதாரம் ஓரளவு நிலைத்தன்மை பெறும். பிற நாடுகள், அந்த நாட்டின் மீது விதித்த தடைகளை திரும்பப்பெறும். மீண்டும் அந்த நாடுகளுடனான ரஷ்யாவின் வணிகம் உயிர் பெறும்.
ஒருவேளை, பேச்சுவார்த்தை வெற்றியை எட்டாமல், போர் தொடர்ந்தால் உக்ரைனுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவியை நிறுத்திவிடுவார் ட்ரம்ப். ‘போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது அதிக வரிகள் விதிக்கப்படும்’ என்று ஏற்கனவே ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆக, ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடி வரும் ரஷ்யாவிற்கு, இது பெரும் இடியாக போய் விழும்.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளை தள்ளுபடி செய்யவோ, குறைக்கவோ இல்லை.

