Last Updated:
உத்தரப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கணித ஆசிரியர் ஜனார்த்தன் மீது புகார். மாணவியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், ஜனார்த்தன் தலைமறைவாகியுள்ளார்.
பொதுத் தேர்வு எழுத சென்ற 10ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், காஷியாபூர் மாவட்டத்தில் வசித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றுவரும் சூழலில் கடந்த 1ஆம் தேதி அங்கு கணிதப் பாடத்திற்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.
இதற்கு மாணவி தயாராகி, தேர்வு மையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கும் ஜனார்த்தன் என்பவர், மாணவியிடம் பேச்சுக்கொடுத்து, அவருக்கு கணிதத்தில் இருக்கும் சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி அவரது அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது” – பிரதமர் நரேந்திர மோடி
அதன்பின் அந்த அறையில் வைத்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். இதனால், அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து வெளியே சொல்லாமல் கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்திருக்கிறார்.
மாணவி மன அழுத்தத்தில் இருப்பதைக் கண்ட பெற்றோர் அவரிடம் வற்புறுத்தி கேட்டபிறகு, தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் கூறியுள்ளார். அதனைக் கேட்டு, மாணவியின் பெற்றோரும், உறவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் மாமா கரிமுதின்பூர் காவல் நிலையத்தில் ஜனார்த்தன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புகாருக்கு உள்ளாகியிருக்கும் ஜனார்த்தன் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜனார்த்தன், சமாஜ்வாதி கட்சியின் ஆசிரியர்கள் பிரிவில் தேசிய துணைத் தலைவராகவும் பதவிவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
March 18, 2025 5:17 PM IST


