பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்க உள்ளது. கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி பெங்களூரை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் இந்த இரு அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக அனுபவ வீரர் ரஹானேவும், ஆர்.சி.பி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிறு அன்று நடைபெற உள்ள 2 போட்டிகளில் ஒரு போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தது என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்த நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19 புதன் அன்று விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:15 மணிக்கு டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்தில் நடைபெறும் குவிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவருக்கு சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வெல்ல வாய்ப்புகள் உள்ளன. டிக்கெட் பெற்றவர்கள் அதில் குறிப்பிட்ட நுழைவாயில் வழியாகத்தான் வரவேண்டும் என்றும், நபர் ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாக ரசிகர்கள் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், கார் பார்க்கிங் வசதிக்காக கலைவாணர் அரங்கம், மெட்ராஸ் யூனிவர்சிட்டி வளாகம், ஓமந்தூரார் மெடிக்கல் காலேஜ் வளாகம், ரயில்வே கார் பார்க்கிங், விக்டோரியா ஹாஸ்டல், பொதுப்பணித்துறை வளாகம் ஆகிய இடங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் மேட்ச் பார்க்க வருவோர் மெட்ரோ ரயில், அரசுப் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேட்ச் டிக்கெட் வைத்திருப்போர் மைதானத்திற்கு வருவதற்கும், திரும்பிச் செல்வதற்கும் மெட்ரோ ரயில், சென்னை மாநகர பேருந்துகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மைதானத்திற்குள் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட எதையும் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரசிகர்களுக்கு மைதானத்திற்குள் வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
போட்டிக்காக நுழைவாயில் வரும் 23ஆம் தேதி மாலை 5 30 மணிக்கு திறக்கப்படும். ரசிகர்கள் வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சென்னை அணி நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெவ்வேறு ஸ்டாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பின்வருமாறு-
C/D/E Lower பகுதிகளுக்கு டிக்கெட் விலை ரூ. 1700
I/J/K Upper பகுதிகளுக்கு டிக்கெட் விலை ரூ. 2500
I/J/K Lower பகுதிகளுக்கு டிக்கெட் விலை ரூ. 4000
C/D/E Upper பகுதிகளுக்கு டிக்கெட் விலை ரூ. 3500
KMK Terrace பகுதிக்கு டிக்கெட் விலை ரூ. 7500
டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 19.03.2025 புதன் அன்று காலை 10.15 மணிக்கு தொடங்கவுள்ளது.
March 17, 2025 3:29 PM IST

