சர்வதேச எழுத்தாளரும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளருமான லெக்ஸ் பிரிட்மேனுக்கு பாட்காஸ்டில் நேர்காணல் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. அதில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கோத்ரா சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது-
”கோத்ராவில் வன்முறை சம்பவம் நடந்த போது மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தன. எனவே நடந்த சம்பவத்திற்கு மாநில அரசுதான் காரணம் என குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். வன்முறையிலிருந்து நிலைமையை இயல்புக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கையை மத்தியில் இருந்த அரசு எடுக்கவில்லை. நீதித்துறை சிறப்பாக விசாரணை நடத்தி நாங்கள் அப்பாவிகள் என்பதை உறுதி செய்தது.
கோத்ராவில் வன்முறை நடப்பதற்கு 12 முதல் 15 மாதங்களுக்கு முன்பாக சில மோசமான சம்பவங்கள் நடந்தன. அதன் அடிப்படையில் கோத்ரா சம்பவத்தை நாம் அணுக வேண்டும். உதாரணத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1999 டிசம்பர் 24ஆம் தேதி காத்மாண்டுவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய இந்திய விமானம் கடத்தப்பட்டது. அதனை ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு தீவிரவாதிகள் கொண்டு சென்றனர்.
நூற்றுக்கணக்கான இந்திய பயணிகள் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இது இந்தியாவிலும் அதிர்வலைகளை மிகக் கடுமையாக ஏற்படுத்தியது. 2000 ஆம் ஆண்டின் போது டெல்லி செங்கோட்டை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 11, 2001 இல் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. 2001 அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதே ஆண்டு 13ஆம் டிசம்பர் 13ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதல் நடந்தது.
8 முதல் 10 மாதங்களுக்குள்ளாக பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்து ஏராளமானோர் உயிரிழந்தனர். அப்படியான சூழலில் ஒரு சிறிய அளவில் பிரச்சனை ஏற்பட்டாலும் அது பூதாகரமாக வெடிக்கும் நிலை காணப்பட்டது. அத்தகைய சூழலில் 2001 அக்டோபர் 7ஆம் தேதி நான் குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றேன். என் முன்னால் ஏராளமான சவால்கள் இருந்தன.
அந்த நேரத்தில் தான் குஜராத் மாநிலம் நிலநடுக்க பாதிப்பிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வந்தது. முதல்வராக பொறுப்பேற்கும் முன்பாக அரசு நிர்வாகத்தில் எனக்கு அனுபவம் கிடையாது. கோத்ராவில் நடந்த வன்முறை சம்பவம் கனவிலும் நினைத்து பார்த்த முடியாதது. மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். காந்தகார் விமான கடத்தல், பாராளுமன்ற தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களின் பின்னணியில் கோத்ரா வன்முறையை பார்க்க வேண்டும்.
அப்படி பார்த்தால் எத்தகைய ஒரு பதட்டமான சூழல் அந்த கால கட்டத்தில் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். இது உண்மையிலேயே அனைவருக்கும் சோகமான நிகழ்வு. எல்லோரும் அந்த நேரத்தில் அமைதிக்காக முயற்சி செய்தார்கள். கோத்ரா வன்முறை குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. 2002ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன.
வகுப்புவாத வன்முறை நடந்திருக்கிறது. 2002ஆம் ஆண்டுக்கு முன்பு சுமார் 250 வன்முறை சம்பவங்கள் குஜராத்தில் நடந்திருக்கிறது. 1969 ஆம் ஆண்டு நடந்த வன்முறை 6 மாதங்கள் நீடித்தது. எனவே குஜராத்தில் வன்முறைக்கு நீண்ட வரலாறு உள்ளது. 2002 கோத்ராவில் நடந்த அந்த மோசமான சம்பவத்திற்கு பின்னர் குஜராத்தில் ஒரு வன்முறை கூட நடந்தது கிடையாது.
கோத்ரா வன்முறை குறித்து நீதிமன்றம் முறையாக விசாரணை நடத்தினாலும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. அவர்கள் மாநில அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். நீதிமன்ற விசாரணையில் நாங்கள் அப்பாவிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க – ‘உக்ரைன் – ரஷ்யா மோதல் முடிவுக்கு வர இதுதான் வழி’ – பிரதமர் மோடி ஆலோசனை
கோத்ரா சம்பவத்திற்கு பின்னர் குஜராத் முழு அமைதியான மாநிலமாக செயல்பட்டு வருகிறது. அங்கு எல்லோருக்குமான வளர்ச்சி என்ற அரசியல் கடைபிடிக்கப்படுகிறது. குஜராத்தை மிகவும் முன்னேறிய மாநிலமாக மாற்றுவதற்கு கடுமையாக உழைத்தோம். உண்மையிலேயே இன்றைக்கு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் முக்கியமான பங்களிப்பை குஜராத் வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.
March 16, 2025 7:21 PM IST
‘கனவிலும் நினைத்துப் பார்த்திட முடியாத சம்பவம்’ – 2002 கோத்ரா வன்முறை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி

