இந்த இறுதிப்போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில், முக்கிய வீரர்களாக வருண் சக்கரவர்த்தி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இதுவரை நடைபெற்ற போட்டிகளில், தோல்வியையே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை இந்திய அணி வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அணியின் அனைத்து வீரர்களும் இருந்தாலும், சில வீரர்கள் அணிக்கு முதுகெலும்பாகவும், சர்ப்ரைஸ் பேக்கேஜ்களாகவும் இருந்து வருகிறார்கள்.
இறுதிப்போட்டியில், அவர்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியம். அப்படி, இந்த தொடரில், இதுவரை இந்தியா விளையாடிய 4 போட்டிகளில், விராட் கோலி 217 ரன்கள் விளாசி, இந்திய பேட்டிங்கிற்கு முக்கிய பங்கை கொடுத்து வருகிறார். மேலும் ஸ்ரேயஸ் ஐயர், நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியைப் போலவே, ரன்களை குவித்து, அணிக்கு தன்னாலான பங்களிப்பை செய்து வருகிறார்.
இதேபோல அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷமி ஆகியோரும் நல்ல ஃபார்மில் இருப்பது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டி போன்ற முக்கிய போட்டிகளில், ஷுப்மன் கில் இதுவரை நன்றாகவே விளையாடி வருகிறார். அவரும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு உள்ளது. மேலும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதில் கவனம் செலுத்தாமல், அதிக ஓவர்களுக்கு விளையாட வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனால் அவரும் நல்ல ஃபார்மில் தான் உள்ளார்.
இவர்களுடன், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் போன்றவர்கள் தங்களின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், எதிரணிக்கு சர்ப்ரைஸ் பேக்கேஜாக வந்தவர் தான் வருண் சக்கரவர்த்தி.
லீக் போட்டிகளில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக வந்து திடீரென 5 விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு அதிர்ச்சியை கொடுத்தார் வருண். இவரை சற்றும் கணிக்காத நியூசிலாந்து வீரர்கள், தடுமாறி தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதேபோல ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதிப் போட்டியிலும் இந்தியாவிற்கு எப்போதும் தலைவலியாக இருக்கும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்..
இன்று நடக்கும் இறுதிப்போட்டியில், வருண் சக்கரவர்த்தியை கணிப்பதற்கே நியூசிலாந்து வீரர்கள் தனி வியூகத்தை மேற்கொள்ளும் அளவிற்கு, விளையாடிய 2 போட்டிகளில் இந்திய அணிக்கு ஒரு பிரம்மாஸ்திரமாக உள்ளார்.
சிறந்த ஃபார்மில் உள்ள இந்திய வீரர்கள், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி, சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
March 09, 2025 10:46 AM IST

