Last Updated:
உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
ஹெட்ஜ் ஃபண்ட் (hedge fund) மேலாளர் மைக்கேல் பிளாட், இங்கிலாந்தின் மிகப் பெரிய பணக்காரராக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு £14.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. தன்னிடம் அளவுக்கதிகமான செல்வம் இருந்தபோதிலும், தனது ஆடம்பரத்தை வெளிப்படுத்தாமல் பிளாட் மிகவும் ரகசியமாகவே வாழ்ந்து வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இவரது சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் வரவேற்பாளருக்குக் கூட இவரது அடையாளம் தெரியாது என்று இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
2000-ம் ஆண்டில் ப்ளூக்ரெஸ்ட் கேபிடல் மேனேஜ்மென்ட்டை இணைந்து நிறுவிய பிளாட்டின் சொத்து மதிப்பு 2024-ம் ஆண்டில் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு அவரை இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு உயர்த்தியது. பணக்காரர்கள் பட்டியலில், INEOS-இன் பில்லியனர் உரிமையாளரும், மான்செஸ்டர் யுனைடெட்டின் முக்கிய பங்குதாரருமான சர் ஜிம் ராட்க்ளிஃப்பை இவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பிளாட் தற்போது பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் அவர் 104-வது இடத்தில்தான் இருக்கிறார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
1968-ம் ஆண்டு லாங்க்ஷையரின் பிரஸ்டனில் பிறந்த பிளாட், ஒரு தொழிலாளர் வர்க்க குடும்பத்தில் வளர்ந்தார். சிறு வயதிலேயே முதலீடு செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக 12 வயதிலேயே முதலீடுகள் தொடர்பான விஷயங்களைக் கற்றுக் கொண்டார். மேலும், அவர் தனது பாட்டியிடமிருந்து பங்குகளை வர்த்தகம் செய்வது பற்றியும் அறிந்துகொண்டார். இவர் தனக்கு வழங்கப்பட்ட £500 மதிப்புள்ள பிறந்தநாள் பரிசை மிகப் பெரிய தொகையாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் கணிதம் மற்றும் பொருளாதாரம் படிக்கும் நேரத்தில், பங்கு முதலீடுகள் மூலம் £30,000 வரை சம்பாதித்து வந்தார் பிளாட். 1991-ல் பட்டம் பெற்ற பிறகு, நியூயார்க்கில் உள்ள பிரபல ஜேபி மோர்கன் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்த பிளாட், பின்னர் லண்டனில் உள்ள கிளையின் நிர்வாக இயக்குநரானார். 2000-ம் ஆண்டில், அவர் ப்ளூக்ரெஸ்ட் கேபிடல் மேனேஜ்மென்ட்டை இன்னொரு நபருடன் சேர்ந்து தொடங்கினார். இது ஐரோப்பாவின் மிகப்பெரிய ஹெட்ஜ் ஃபண்டுகளில் ஒன்றாக தற்போது வளர்ந்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவைவிட துபாயில் தங்கத்தின் விலை மலிவாக இருப்பது ஏன்…? முக்கிய சுங்க விதிமுறைகள் இவைதான்…!
நிதிரீதியாக வெற்றி பெற்ற போதிலும், பிளாட் மிகவும் குறைவாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். ஆடம்பர விளம்பரத்தை அறவே தவிர்க்கும் பிளாட், அரிதாகவே நேர்காணல்களை வழங்குவார். 2006-ம் ஆண்டில், தி டைம்ஸ் இதழ் ப்ளூக்ரெஸ்ட் பற்றி கட்டுரை எழுதியபோது, பிளாட்டும் அவரது இணை நிறுவனர் வில்லியம் ரீவ்ஸும் புகைப்படம் எடுக்க மறுத்துவிட்டனர்.
தன்னுடைய நிறுவனத்திற்கு பணியமர்த்தல் விஷயத்திலும் பிளாட் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த நபராகவே இருக்கிறார். “சனிக்கிழமை இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அமெரிக்கர்களை” தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்து ஆன்லைன் போக்கர் விளையாடத் தயாராக இருக்கும் ஒருவர் தான், தனது நிறுவனத்திற்குத் தேவையானவர்” என பணியமர்த்தல் குறித்து “ஹெட்ஜ் ஃபண்ட் மார்க்கெட் விஸார்ட்ஸ்” என்ற புத்தகத்தில் பிளாட் விவரித்துள்ளார்.
2015-ம் ஆண்டில், பிளாட் தனது சொந்த செல்வத்தை முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவதற்காக வாடிக்கையாளர்களின் பணத்தை நிர்வகிப்பதை நிறுத்தினார். சமீபத்தில் இவரது மகன் மார்கஸ் ப்ளூக்ரெஸ்டில் சேர்ந்துள்ளார்.
March 09, 2025 12:57 PM IST


