Last Updated:
Virat Kohli | பல நாடுகள் பங்கேற்கும் ஐசிசி போட்டிகளில், இந்தியாவின் கோப்பை கனவுக்கு நியூசிலாந்து அனேக முறை தடை போட்டதால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சியின் போது இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக வெளியாகி உள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பல நாடுகள் பங்கேற்கும் ஐசிசி போட்டிகளில், இந்தியாவின் கோப்பை கனவுக்கு நியூசிலாந்து அனேக முறை தடை போட்டதால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி நாளை நடக்கவுள்ளதை அடுத்து இந்திய அணி வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வலைப்பயிற்சியின் போது வேகப்பந்துவீச்சாளரின் பந்தை எதிர்கொண்ட கோலிக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவரது காலில் பந்து வேகமாக பட்டதால், அவர் பயிற்சியை பாதியில் நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிசியோ ஊழியர்கள் விராட் கோலிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதன்பின் காயத்தால் ஏற்பட்ட வலியால் விராட் கோலி பயிற்சியை தொடரவில்லை. எனினும், மைதானத்திலேயே இருந்து மற்றவர்களின் பயிற்சியைக் கவனித்து கொண்டார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக இருக்கக் கூடிய விராட் கோலி, நான்கு போட்டிகளில் 83.14 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் 217 ரன்கள் குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்களும் எடுத்து ஃபார்மில் உள்ளார்.
இதனால் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாதோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கு இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி காயம் பெரியதல்ல என்றும், விராட் கோலியால் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 08, 2025 4:53 PM IST


