Last Updated:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 53% அதிகமாகும்.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம், நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் பங்கேற்றன. அவை தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் A பிரிவிலும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் B பிரிவிலும் இடம் பெற்றிருந்தன. லீக் சுற்றுக்குப் பிறகு, A பிரிவில் இருந்து இந்தியாவும் நியூசிலாந்தும், B பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி சுற்றில், இந்தியா, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. விராட் கோலி, கே.எல்.ராகுல், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. அதே போல நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா போட்டியில், நியூசிலாந்து அணி வீரர்களான ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரமாக சதமடித்து இமாலய ஸ்கோரை நிர்ணயித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில், டேவிட் மில்லர் சதமடித்தாலும், அந்த சிறப்பான ஆட்டம் வீணானது.
இந்த நிலையில், வரும் மார்ச் 9ஆம் தேதி, துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்..?
இந்தத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மொத்தம் $6.9 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகை 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 53% அதிகமாகும். வெற்றி பெறும் அணிக்கு $2.24 மில்லியன் (சுமார் ரூ.19.5 கோடி) பரிசாகக் கிடைக்கும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு $1.12 மில்லியன் (சுமார் ரூ.9.78 கோடி) பரிசாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா $560,000 (சுமார் ரூ.4.89 கோடி) வழங்கப்படும்.
மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்துமா அல்லது நியூசிலாந்து அணி லீக் போட்டியில் தோல்வியடைந்ததால், இந்திய அணியை பழிதீர்க்குமா என்பதை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
March 08, 2025 2:43 PM IST


