போட்டி நிறைந்த இந்த உலகில் எந்த தொழில் செய்தாலும், அதில் நிறையவே சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து ஆக வேண்டும். சூழ்ச்சிகளாலும், பொறாமையாலும் உங்கள் தொழில் முன்னேற்றத்தை, வளர்ச்சி அடையாமல் செய்பவர்களுக்கு மத்தியில் நீங்களும் முன்னேற முருகனை இந்த ஒரு பொருளால் அபிஷேகம் செய்து பாருங்கள். சிறப்பான தொழில் வளர்ச்சிக்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யும் முறை என்ன? என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள். முருகன் அபிஷேக பிரியராக இருக்கின்றார்.
முருகனுக்கு செய்யும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக் கூடியது. முருகனுக்கு மொத்தமாக எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்ய முடியாதவர்கள், உங்கள் பிரச்சனைக்குரிய பொருட்களை வாங்கி கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே எளிமையாக முருகன் சிலைக்கு நீங்களே அபிஷேகம் செய்தும் பயனடையலாம்.
அந்த வகையில் தொழில் சிறப்பாக அமையவும், போட்டிகளை எதிர்த்து செய்யும் தொழிலில் நாம் முன்னேற்றம் காணவும் முருகப் பெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வது நல்லது? தமிழ் கடவுளான முருகன் பக்தர்கள் தன்னிடம் கேட்கும் வரங்களை கேட்டபடி கலியுகத்தில் வாரி வழங்குபவர் ஆவார். இவரை வழிபட்டால் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாக பக்தர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.
முருகனுக்கு ரொம்பவும் விசேஷமான கிழமை செவ்வாய்! செவ்வாய்க்கிழமையில் வீட்டிலேயே முருகன் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு உரிய வழிபாடு ஏற்பாடுகளை செய்து வையுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்து முருகருக்கு அலங்காரங்கள் செய்யுங்கள். மலர் அலங்காரம் செய்த முருகனை ஒரு மனையில் அமர்த்துங்கள். பின்னர் பூஜைக்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்யுங்கள். முருகனுக்கு வெற்றிலை தீபம் என்றால் மிகவும் விருப்பம்.
ஒரு தாம்பூலத்தில் ஆறு வெற்றிலை இலைகளை வட்டமாக பரப்பி வைத்து அதன் மீது ஒவ்வொரு அகல் தீபங்களை வையுங்கள். தீபங்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டுக் கொள்ளுங்கள். முருகனுக்கு உரிய நைவேத்திய பிரசாதங்களை தயார் செய்யுங்கள். முருகனுக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்ய, தொழிலில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எனவே சுத்தமான பன்னீரை எடுத்து வையுங்கள். முருகனுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து மீண்டும் அலங்காரம் செய்து தீபங்களை ஏற்றி மனதார வீட்டிலேயே எளிமையான முறையில் முடிந்தால்
விரதம் இருந்து, முருக கவசம் பாடி, தொழில் முன்னேற பிரார்த்தனை செய்யுங்கள்.
இப்படி பிரார்த்தனை செய்ய முருக அருளால் உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய போட்டியாளர்களை எளிதாக வெற்றிக் கொள்வீர்கள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி வரக்கூடிய நாட்களிலும் இந்த பூஜையை செய்யலாம். வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து இந்த பூஜையை மேற்கொள்பவர்களுக்கு எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. கோவிலுக்கு சென்று பன்னீர் வாங்கி கொடுத்து, முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். தொடர்ந்து பன்னீரால் அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டு வருபவர்களுக்கு, எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், தொழில் ரீதியான போட்டிகள், பிரச்சனைகள் இருந்தாலும், அவை விரைவில் நிவர்த்தி அடையும். உங்கள் தொழிலில் நீங்கள் காணக் கூடிய தோல்விகளை எதிர்த்து போராட முருகனை மனதார இப்படி வழிபட்டு, அதன் பலன்களை அனுபவியுங்கள்.



