Last Updated:
சிவசேனா எம்.பி. சஞ்சை ராவுத், மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஜெயகுமார் கோர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிவசேனா எம்.பி. சஞ்சை ராவுத், மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஜெயகுமார் கோர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சஞ்சை ராவுத், “மகாராஷ்டிரா அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாதிக்கப்பட்ட நபர் அடுத்த சில தினங்களில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் வெளியே போராட்டம் நடத்த இருக்கிறார். இந்த விவகாரம், சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டும். இப்படியான அமைச்சர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஜெயகுமார் கோர், சாத்ரா மாவட்டம், மன் – கடாவ் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிரா அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்துவருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு வரை காங்கிரஸில் இருந்த இவர், பிறகு பாஜகவில் இணைந்தார்.
இதையும் படியுங்கள் : “யாரிடமும் பாஜக மறைமுகமாக பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு அண்ணாமலை பதில்
ஆபாசமான புகைப்படங்களை பெண்ணுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் இவர் மீது கடந்த 2016ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் புகார் கொடுத்த பிறகு, கைது செய்யப்படாமல் இருக்க ஜெயகுமார் கோர், சாதரா மாவட்ட நீதிமன்றம் மற்றும் மும்பை உயர் நீதிமன்றம் ஆகியவற்றை அனுகினார். ஆனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, 10 நாள் அவர் சிறைவைக்கப்பட்டார்.
இந்த வழக்கு முடிவுக்கு வந்தபிறகு, பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஜனவரி மாதம், தனது பெயர் மற்றும் முகவரி ஆகியவை வாட்ஸ் அப் குழுக்களில் பகீரப்பட்டதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.
இது குறித்து ஜெயகுமார் கோர் கூறுகையில், ”கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. என்னிடம் தீர்ப்பின் நகலும் கூட இருக்கிறது. அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து என்னை விடுவித்துள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் போன்களை மீண்டும் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனநாயகத்தில் உச்ச நீதிமன்றமே மிக உயர்ந்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பு வந்து ஆறு வருடங்கள் ஆகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்கள் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பதற்கு வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
March 05, 2025 9:40 PM IST


