Last Updated:
India vs Australia | ஆஸ்திரேலியாவை 264 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, 48.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 84 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்தனர்.
துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஹூப்பர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய நிலையில், “டேஞ்சர் மேன்” டிராவிஸ் ஹெட்டை, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியேற்றினார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 61 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா அணி 49 புள்ளி 3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்களையும், வருண் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி விளையாடிய நிலையில், தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கில் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் சேஷிங் மன்னன் விராட் கோலியுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் அணியின் சரிவை தடுத்து நிறுத்தினார். ஸ்ரேயஸ் 45 ரன்களில் வெளியேறிய நிலையில், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸம்பா பந்தில், ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரு சிக்சர்கள் விளாச, இறுதியில் சிக்சருடன் ஆட்டத்தை முடித்துவைத்தார் கேஎல்.ராகுல்.
இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டுமே இழந்து 267 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 5வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு இந்தியா பழியும் தீர்த்தது.
இதனிடையே சாம்பின்ஸ் டிராபி தொடரில், இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றிய விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். வெற்றிக்கான ரன்களை துரத்திப் பிடிப்பதில், வல்லவரான கோலி, ஒரு நாள் போட்டியில் 2வது பேட்டிங் செய்து 8,000 ரன்களை கடந்துள்ளார். இந்த சாதனையில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 8,720 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை எடுத்த இந்தியாவின் ஷிகர் தவன் சாதனையையும் கோலி நேற்று தகர்த்தார். தவன் 701 ரன்களை சேர்த்திருந்த நிலையில், கோலி தற்போது 746 ரன்களை எடுத்துள்ளார். இதேபோல ஐசிசி-யின் ஒரு நாள் தொடர்களில் 24 அரை சதம் விளாசி, அதிக அரை சதம் விளாசிய சச்சின் சாதனையையும் கோலி முறியடித்தார்.
March 05, 2025 8:12 AM IST


