சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெற இருக்கிறது. இதில், பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியை, ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.
இந்திய அணி பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து துறைகளிலும் மிகுந்த வலுவான அணியாக வலம் வருகிறது. அதே நேரம் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகிய போதும், பெரிய ஸ்கோர்களையும் எளிதாக விரட்டிப் பிடிக்கிறது. ஆஸ்திரேலிய இளம் வீரரான மேட் ஷார்ட் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக கூப்பர் கானோலி களமிறங்க இருக்கிறார்.
சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று பகல் 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. கடந்த 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு, சுமார் 14 ஆண்டுகளாக, நாக் அவுட் சுற்றில், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது பெருங்கனவாகவே மாறிவிட்டது. அந்த சோக வரலாற்றை இந்திய அணி இன்று திருத்தி எழுதுமா அல்லது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில், நாளை நடக்க உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியுடன் வரும் 9 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.
இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதி ஆட்டம் புதிய மைதானத்தில் நடைபெறும் நிலையில், ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பதில் ஆடுகளம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி வந்தாலும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகின்றன. வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக வெவ்வேறு மைதானங்களில் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை புதிய மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஐசிசி அமைப்பின் துபாய் பொறுப்பாளரும், மைதான வடிவமைப்பாளருமான மேட்ஹே சான்ட்ரி இக்களத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த மைதானம் கருப்பு மண்ணால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முதல் 10 ஓவர்கள் தான் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும், அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களின் கைகளே ஓங்கும் என கருதப்படுகிறது. அதே போன்று, பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்ப்பது சற்று கடினமானதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த மைதானத்தைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி உட்பட 4 சுழற்பந்து வீச்சாளர்களை இந்தியா களமிறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவும் தங்கள் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வியூகம் வகுத்துள்ளனர். எனவே, இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களே வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 04, 2025 7:23 AM IST

