Last Updated:
தனது 300ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி, அதிக ரன்கள் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் துபாய் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
தொடக்கம் முதலே நியூசிலாந்து பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஷுப்மன் கில் 2 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். தனது 300ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி, அதிக ரன்கள் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அப்போதுதான் ஸ்ரேயஸ் ஐயர் – அக்சர் படேல் ஜோடி சேர்ந்து, ரன் எடுக்க தொடங்கியது. இவர்கள் ஆட்டத்தின் மூலம் ஸ்கோர் பொறுமையாக உயர்ந்தது. அக்சர் படேல் 42 ரன்களுக்கும், ஸ்ரேயஸ் ஐயர் 79 ரன்களும் எடுத்து வெளியேறினர். பிறகு நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோரும் சற்று ஏமாற்றமளித்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கைல் ஜேமிசன், வில் ஓ’ரூர்க், மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
தற்போது 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்கும் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டும்.
March 02, 2025 6:12 PM IST


