Last Updated:
ஐபிஎல் 2025 சீசனில் அனைத்து அணிகளுக்கும் புதிய பயிற்சி கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரில் இனி புதிய மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு சீசனில் இருந்து, ஐபிஎல் அணிகளுக்கு சீசனுக்கு முந்தைய பயிற்சி அமர்வுகளுக்கான கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விதித்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நீண்ட நாட்களுக்கு நடைபெற்றது. இந்த போட்டிகளுக்குப் பிறகு, ஐபிஎல் போட்டிகளுக்கான மைதானங்கள் சேதமடைவதைத் தடுக்கும் நோக்கில் புதிய பயிற்சி முறையை பிசிசிஐ அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அணிக்கும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக அதிகபட்சமாக ஏழு பயிற்சி அமர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், ஒவ்வொரு அமர்வும் மூன்று மணிநேரம் வரை நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில், அணிகள் இரண்டு பயிற்சி ஆட்டங்களை மட்டுமே விளையாட முடியும். மேலும் சீசன் தொடங்கியவுடன், வலைப் பயிற்சிகள் அல்லது போட்டி நாள் பயிற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
சீசனுக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்கள், போட்டி நடக்கும் மைதானத்திற்குப் பதிலாக வேறு மைதானத்தில் நடைபெறும். மேலும் இரவு நேரத்தில் நடைபெறும் பயிற்சி போட்டிகள் மூன்றரை மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதுபோன்ற போட்டிகளுக்கு பிசிசிஐயின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கிரிக்கெட் வீரருடனான காதலுக்காக மதம் மாறிய பெண்..! பலரையும் கவர்ந்த காதல் கதை
அதுமட்டுமின்றி, ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, எந்தவொரு பயிற்சி அமர்வுகளோ அல்லது பயிற்சி போட்டிகளோ, லீக் போட்டி நடைபெறும் மைதானத்தில் அனுமதிக்கப்படாது. மேலும் இரண்டு அணிகள் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய விரும்பினால், முதலில் அந்த அணிகளின் மேலாளர்கள் பேசி தீர்வு காண வேண்டும். அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியாவிட்டால், பிசிசிஐ தலையிட்டுத் தீர்மானிக்கும்.
ஐபிஎல் சீசன் தொடங்கியவுடன் திறந்தவெளி பயிற்சிக்கு அனுமதி இல்லை என்றாலும், ரேஞ்ச் ஹிட்டிங், ரன்-அப்கள், த்ரோடவுன் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி பக்கவாட்டு மைதானம் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
March 02, 2025 4:58 PM IST


