Last Updated:
Traditional Cooking: தட்டிப் பார்க்கும் பொழுது மணி போல் சத்தம் கேட்கும். நன்றாக வெந்த பானை தான் இந்த மாதிரி சத்தம் கேட்கும். இந்த பானையில் குழம்பு போன்றவை செய்யலாம்…
கோடைக்காலம் துவங்கும் முன்னரே வெயில் தன் வேலையைத் துவங்கி விட்டது. இந்த சூழலில் நாம் நிச்சயம் மண்பானையைத் தேடி வாங்கத் துவங்கி இருப்போம். தற்போதெல்லாம் நாம் மண்பாண்டத்தை ஜில் தண்ணீர் குடிக்கத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் தாத்தா, பாட்டி காலத்தில் முக்கியமான சமையல் கலனே மண்பாண்டங்கள் தான்.
சோறு வடிக்க, குழம்பு வைக்க, மீன் குழம்பிற்கு தனி சட்டி, என இந்த மண்பாண்டத்திலும் பல வகைகளில் சமையல் கலன்கள் உண்டு. ஒரு சிலர் தான் இந்த காலத்திலும் நான் ஸ்டிக், அலுமினியப் பாத்திரங்களால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்க்க இந்த மண்பாண்டப் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மண்பாண்டப் பொருட்களில் சமைப்பதால் உணவின் சுவை கூடுவதுடன் உடலுக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கின்றது. ஏனைய ரக பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் மண்பாண்டங்களின் விலையும் இது குறைவே. மண் பாத்திரங்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என சிவசாமி கூறுகையில், “இது மண் பானை மண்ணினால் செய்யப்பட்டது. இந்த பானையில் சாப்பாடு வைக்கலாம் குழம்பு வைக்கலாம். இந்த மாதிரி பானை வாங்கும்பொழுது நன்றாகத் தட்டிப் பார்த்து வாங்க வேண்டும்.
இந்த மாதிரி தட்டிப் பார்க்கும் பொழுது மணி போல் சத்தம் கேட்கும். நன்றாக வெந்த பானை தான் இந்த மாதிரி சத்தம் கேட்கும். இந்த பானையில் குழம்பு போன்றவை செய்யலாம். இந்த பானை ஒரு அளவிற்கு வெக்கடு குறைந்த பானை. இதில் சத்தம் கொஞ்சம் குறைவாக இருக்கும். இது போன்ற பானைகளை நாம் இரண்டாவது முறை வேக வைக்க வேண்டும். விறகு வைத்து எரிக்கும் பொழுது நெருப்பு பத்தவில்லை என்றால் இது போன்று வேகாமல் இருக்கும்.
சூளையில் சரியான அளவு நெருப்பு போட்டு வேக வைக்க வேண்டும். நெருப்பு அதிகமாக இருந்தாலும் வெடித்து விடும் நெருப்பு குறைவாக இருந்தாலும் நன்று வேகாமல் போய்விடும். கருப்பு பானை என்பது மூடாக்கு போட்டு பிறகு வைத்துப் புகை வெளியில் போகாமல் உள்ளேயே இருந்து வேக வைப்பதால் பானை கருப்பாகும். ஆனால் இரண்டு பானையும் ஒன்றுதான் மண்ணும் ஒன்றுதான்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
March 02, 2025 2:05 PM IST

