அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டபோது, அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்துவேன் என்பது. நினைத்தபடியே தேர்தலில் அவர் வெற்றி பெற்று அதிபர் ஆனவுடன், முன்னாள் அதிபர் பைடனின் கொள்கைகளிலிருந்து 360 டிகிரி அளவுக்கு மாறுபட்டார். ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கம் காட்டத் தொடங்கிய டிரம்ப், போருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியே காரணம் எனக் கூறினார்.
ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றும், காமெடியன் என்றும் அழைத்து வெறுப்பேற்றினார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட ஜெலன்ஸ்கி, டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, உடனடியாக வாஷிங்டன் பறந்தார். ஜெலன்ஸ்கியை கைகுலுக்கல், புன்னகை என வரவேற்றார் டிரம்ப். இருவருக்கும் இடையிலான முதல் 30 நிமிட ஆலோசனை மிகவும் சுமூகமாகவே சென்றது. வெளிநாட்டுத் தலைவர்கள் அமெரிக்கா வரும் போது, அவர்களை ஓவல் அலுவலகத்தில் அதிபர் மட்டுமே சந்திப்பது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, துணை அதிபர் ஜே.டி. வேன்சும் சந்திப்பில் இருந்தார். டிரம்பும் ஜெலன்ஸ்கியும் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜதந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறிய போது பதற்றம் தொற்றிக் கொண்டது.
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் இதற்கு பதிலளிக்கிறேன். அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகங்கள் முன் புதின் பற்றி கடுமையாக பேசும் அதிபர் தான் இருந்தார். அதன்பின் புதின் உக்ரைன் மீது படையெடுத்தார். உக்ரைனின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை அழித்தார். அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பாதையை ராஜாங்க ரீதியில் அடைய முடியும். அமெரிக்க அதிபரின் செயல்களை விட வார்த்தைகள் முக்கியம் என்பதை பைடனிடம் சொன்னோம். ராஜாங்க ரீதியிலான செயல்பாடுகளே அமெரிக்காவை சிறந்த நாடாக உருவாக்கியிருக்கிறது. அந்தப் பாதையில் தான் டிரம்ப் செல்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் மீது பல புகார்களை அடுக்கினார்.
ஜெலன்ஸ்கி: நான் ஒன்று கேட்கலாமா?. புதின் உக்ரைனின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டார். 2014-ம் ஆண்டு முதல் ஆக்கிரமித்து வருகிறார். இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஆனால், அவரை யாரும் தடுக்கவில்லை. இந்த ஆக்கிரமிப்பு ஒபாமா, டிரம்ப், பைடன், இப்போது மீண்டும் டிரம்ப் காலத்திலும் நடந்து வருகிறது. கடவுள் ஆசீர்வாதத்தால் டிரம்ப் இப்போது புதினை தடுத்து நிறுத்துவார் என்று நம்புகிறேன். 2014 – 2022 வரை இதே நிலை தான். எங்களை ஆக்கிரமித்து, மக்களைக் கொன்றுவருகிறார். யாரும் புதினை தடுத்து நிறுத்தவில்லை. நாங்கள் புதினுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் போர் நிறுத்தத்திலும் கையெழுத்திட்டோம். ஆனால் புதின் போர் நிறுத்தத்தை மீறினார். சிறைக்கைதிகளை விடுவிக்க மறுத்தார். ஆனால், நீங்கள் என்ன மாதிரியான ராஜாங்க நடவடிக்கைகளை பற்றி பேசுகிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?
வார்த்தைகள் சற்று தடிக்க, ஓவல் அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது மரியாதைக்குரிய செயல் அல்ல என ஜெலன்ஸ்கியை ஜே.டி.வான்ஸ் எச்சரித்தார்.
வான்ஸ்: உக்ரைன் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவரும் ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளைப் பற்றி நான் பேசுகிறேன். நீங்கள் ஓவல் அலுவலகம் வந்து அமெரிக்க ஊடகங்கள் முன் இதைப் பற்றி பேச முயற்சிப்பது அவமரியாதை என நினைக்கிறேன். உங்களுக்கு மனிதவள பிரச்சனைகள் இருப்பதால், ராணுவ வீரர்களை கட்டாயப்படுத்தி முன்களத்திற்கு அனுப்புகிறீர்கள். அமெரிக்க அதிபர் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கும் நடவடிக்கைகளுக்காக நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இதற்கு, உக்ரைனில் என்ன பிரச்னைகள் நிலவுகின்றன என உங்களுக்குத் தெரியுமா என துணை அதிபரிடம் வினவினார் ஜெலன்ஸ்கி.
ஜெலன்ஸ்கி: நீங்கள் எப்போதாவது உக்ரைன் சென்றீர்களா? எங்களுக்கு என்ன பிரச்சனை என்பது உங்களுக்குத் தெரியுமா?
சூழல் சூடுபிடிக்க, ஓவல் அலுவலகத்திற்கு வந்து, அந்நாட்டு நிர்வாகத்தைக் குறை கூறுவது மரியாதையான செயலா என வான்ஸ் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
வான்ஸ்: நான் சென்றிருக்கிறேன். அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி நான் அறிவேன். நீங்கள் மக்களை அழைத்து வந்து பரப்புரை செய்ததை அறிவேன். உங்கள் ராணுவத்தில் மக்களைச் சேர்ப்பதில் உங்களுக்கு சிக்கல் இருப்பதை நீங்கள் ஏற்கவில்லையா?. இதனை ஓவல் அலுவலகத்துக்குக் கொண்டுவருவது சரியானது என நினைக்கிறீர்களா?. உங்கள் நாட்டை அழிவில் இருந்து தடுக்கும் நிர்வாகத்தை தாக்குவது சரியானதா?
இதனைக் கேட்டு, அமெரிக்காவுக்கு போரின் தாக்கம் தெரியாது என ஜெலன்ஸ்கி கூறினார்.
ஜெலன்ஸ்கி: நிறைய கேள்விகள் உள்ளன. ஆரம்பத்தில் இருந்து பேசுவோம். போரின்போது அமெரிக்கா உட்பட அனைவருக்கும் பிரச்சனைகள் இருந்தன. உங்களுக்கு கடல் இருந்தது. போரைப் பற்றி நீங்கள் உணரவில்லை, எதிர்காலத்தில் உணர்வீர்கள்.
அப்போது இடைமறித்த அதிபர் டிரம்ப், நாங்கள் என்ன நினைக்க வேண்டும் என நீங்கள் கூறாதீர்கள் எனக் கடுமையாக எச்சரித்தார்.
டிரம்ப்: நாங்கள் எதை உணர வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறோம். நீங்கள் எங்களுக்கு உத்தரவிடும் நிலையில் இல்லை. நீங்கள் அவமதிப்பதுபோல் பேசுகிறீர்கள்.
ஜெலன்ஸ்கி: நான் அப்படி சொல்லவில்லை.
டிரம்ப்: உங்களிடம் துருப்பு சீட்டு இல்லை. எங்களுடன் இணைந்தால் உங்களுக்கு சீட்டு கிடைக்கும்.
ஜெலன்ஸ்கி: நான் சீட்டு விளையாடுவதில்லை. நான் ஒரு அதிபர். நாட்டைப் பற்றிக் கவலையுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
டிரம்ப்: நீங்கள் இப்போது சீட்டாட்டம் தான் ஆடுகிறீர்கள். பல லட்சம் மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள்.
ஜெலன்ஸ்கி: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இருவரும் மாறிமாறி பேசிக்கொண்டிருக்கும் போது, மூன்றாம் உலகப்போரை வைத்து ஜெலன்ஸ்கி சூதாடுவதாகக் கடுமையாகச் சாடினார் டிரம்ப்.
டிரம்ப்: நீங்கள் மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள். அமெரிக்கா உங்களுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளித்தது.
அப்போது, அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி ஒரு முறை கூட நன்றி தெரிவிக்கவில்லை என ஜே.டி.வான்ஸ் விமர்சித்தார்.
ஜெலன்ஸ்கி: உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆனால் போரைப் பற்றி நீங்கள் மிகவும் சத்தமாகப் பேசினால், உங்களால் நினைத்ததைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?.
அதற்கு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்கு சேகரித்ததாகவும் ஜெலன்ஸ்கி மீது குற்றம் சாட்டினார் வான்ஸ்.
வான்ஸ்: நீங்கள் பென்சில்வேனியாவுக்குச் சென்று அக்டோபரில் எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்தீர்கள். அமெரிக்காவிற்கும் உங்கள் நாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும் அதிபர் டிரம்புக்கும் நன்றியும், பாராட்டும் சொல்லுங்கள்.
டிரம்ப்: நீங்கள் நிறைய பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது.
ஜெலன்ஸ்கி: எனக்குத் தெரியும்.
டிரம்ப்: நீங்கள் போரில் வெற்றி பெறவில்லை. இனி வெற்றி பெறப் போவதும் இல்லை. எங்களது ராணுவ உபகரணங்கள் உங்களிடம் இல்லையென்றால், இந்தப் போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும்.
ஜெலன்ஸ்கி: 3 நாட்களில் முடிந்து இருக்கும் என்று புதின் சொன்னார். அவரது கருத்தைத் தான் இப்போது நீங்கள் எதிரொலிக்கிறீர்கள்.
வான்ஸ்: நீங்கள் தவறு செய்கிறீர்கள்.
டிரம்ப்: நீங்கள் இப்போதே போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டால் உங்கள் மக்கள் மீது குண்டு விழுவது நிறுத்தப்படும்.
ஜெலன்ஸ்கி: நிச்சயமாக நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும்.
டிரம்ப்: ஒரு ஒப்பந்தம் போடுவதை விட வேகமாக ஒரு போர் நிறுத்தத்தை நாம் கொண்டு வர முடியும்.
ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் பற்றி எங்கள் மக்களிடம் கேளுங்கள்.
டிரம்ப்: இது எனக்குப் பிடிக்கவில்லை. கருத்து கேட்பது போன்று ‘ஸ்டுபிட் பிரசிடென்ட்’ பைடன் தான் செய்வார்.
அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, ரஷ்யா போர் நிறுத்தத்தை மீறினால் என்ன செய்வது எனக் கேள்வி எழுப்ப, நிலைமை இன்னும் சூடானது.
டிரம்ப்: எதுவும் நடக்கலாம்? இப்போதே உங்கள் தலையில் குண்டு விழுந்தால் என்ன செய்வது?. ரஷ்யா பைடனை மதிக்கவில்லை. ஆனால் புதின் என்னை மதிக்கிறார், ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். ஆனால் உக்ரைன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியுமா? என்பது எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு அவர்களுக்குள் விவாதம் நடக்க, இந்த நிகழ்வுகளை அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்க வரலாற்றில், ஓவல் அலுவலகத்தில் இதுவரை நிகழாத வாக்குவாதத்தை, அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர் செய்தியாளர்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தனர். இந்த வார்த்தை மோதல் காரணமாக, அமெரிக்கா – உக்ரைன் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் ரத்தானது.
இந்த அசாதாரண நிகழ்வுகளைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் மற்றும் அந்நாட்டு குழுவினரை வெளியேற அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன் காரணமாக, ரோஸ்மேரி சிக்கன், ஸ்பிரிங் கீரின் சாலட் உள்ளிட்ட உயர்தர உணவு வகைகள் யாரும் சாப்பிடாமல் வீணாகின.
முன்னதாக, ஏன் சூட் அணியவில்லை என்ற கேள்வியை எழுப்பி தன் பங்குக்கு ஜெலன்ஸ்கியை கோபப்படுத்தினார் ‘ரியல் அமெரிக்கா வாய்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரையன் கிளென். தன்னைச் சூடேற்றிய கேள்விக்கும், போர் முடிந்த உடன் சூட் அணிந்துகொள்வேன் என அசராமல் பதில் அளித்தார் ஜெலன்ஸ்கி.
மோதலில் முடிந்த சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்கா செய்த உதவிகளுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி, டிரம்பிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனினும், டிரம்ப் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் ஜெலன்ஸ்கியை அவமதித்து விட்டதாக உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்குச் சென்று, உக்ரைனுக்காக ஒரு சிங்கத்தைப் போல் ஜெலன்ஸ்கி சண்டையிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜெலன்ஸ்கி உடனான சந்திப்புக்குப் பின், தனது Mar-a-Lago வீட்டிற்குப் புறப்பட்ட டிரம்ப், ஜெலன்ஸ்கி அத்துமீறி நடந்துக்கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான உறவு உடனடியாக மேம்படவில்லை என்றால், உக்ரைனுக்கு அளித்துவரும் ராணுவ உதவியை, டிரம்ப் முற்றிலுமாக நிறுத்திவிடுவார். முன்னாள் அதிபர் பைடன், உக்ரைனுக்கு அளித்த ஆயுதங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் டிரம்ப். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்குக் கொடுத்துள்ள ஆயுதங்கள், வரும் மே மாதம் வரை மட்டுமே நீடிக்கும். அதிநவீன ராணுவ தளவாடங்களை வைத்துள்ள ரஷ்யாவிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் கடுமையாகத் திண்டாடும் சூழலே ஏற்படும்.
மோதலாக மாறிய சந்திப்புக்குப் பிறகும், ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. ஏற்கனவே டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ள அந்நாடுகள், அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு உக்ரைனுடன் கைகோர்க்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், வெளிப்படையாகவே ஜெலன்ஸ்கிக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போரை முதலில் தொடங்கியது ரஷ்யா தான். 2014-ம் ஆண்டு உக்ரைன் பகுதியான கிரீமியாவைக் காரணமே இன்றி ரஷ்யா ஆக்கிரமித்த போது, தன்னைத் தற்காத்துக் கொள்ள நேட்டோ அமைப்பில் இணையத் திட்டமிட்டது உக்ரைன்.
நேட்டோ என அழைக்கப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாகவே கருதப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பு உருவானபோதே அன்றைய சோவியத் யூனியனை நோக்கி, விரிவுப்படுத்தப்பட மாட்டாது என்று நேட்டோ நாடுகள் உறுதியளித்தன. ஆனால் சோவியத் யூனியன் சல்லிசல்லியாக சிதறிய பின்னர், அந்த வாக்குறுதியை மீறி ரஷ்யாவுக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்ட நாடுகளை நேட்டோ இணைத்துக் கொண்டது. கிரீமியாவை ரஷ்யா கைப்பற்றியதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்க்க விரும்புவதாக அறிவித்தார்.
நேட்டோ அமைப்பின் சட்ட திட்டங்களின் படி, எந்தவொரு நாடும் அதில் சேர வேண்டுமானாலும் அந்த நாடு அரசியல் ரீதியாக, ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக சில இலக்குகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால், உக்ரைன் இந்தத் தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை. எனினும், ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே நேட்டோவில் உக்ரைன் சேர்வதற்கு ஆதரவளித்தது அமெரிக்கா.
தன் அண்டை நாடான உக்ரைனில் அமெரிக்க ஆதரவு நேட்டோ படை, குடிபுகுவது ரஷ்யாவிற்குப் பிடிக்கவில்லை. அதனால், அந்த முடிவைக் கைவிடுமாறு ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்தார். ஆனால், ஜெலன்ஸ்கியோ, அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமடைந்த புதின், உக்ரைன் எல்லையில் ஆயிரக்கணக்கான படைகளை முதலில் குவித்தார். பின்னர் முழுஅளவிலான தாக்குதலை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-இல் தொடங்கினார்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவ வலிமையில் இரண்டாவது இடத்தில் உள்ள ரஷ்யாவை எதிர்கொள்ள ஏராளமான ஆயுதங்களை வழங்கியது அமெரிக்கா. அமெரிக்காவால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஏவுகணைகள் ATACMS (Army Tactical Missile System) என்று அழைக்கப்படுகின்றன. 1980-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இவை, 300 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்துசென்று தாக்க வல்லவை. ATACMS ஏவுகணைகளை வழங்கும் முன்பே, 160 கிலோ மீட்டர் பறந்து சென்று இலக்கைத் தாக்கக்கூடிய சிறிய ரக ஏவுகணைகளையும் அனுப்பி வைத்தது. அமெரிக்கா மட்டுமன்றி மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய போது, இரண்டே நாளில் உக்ரைன் மண்டியிட்டுவிடும் என உலகமே எதிர்பார்த்தது. ஆனால், மூன்று ஆண்டுகளைக் கடந்தும், இன்று வரை நின்று போராடிக் கொண்டிருக்கிறது உக்ரைன்.
‘நம் இரண்டு நாடுகளுக்குமே போர் தேவைப்படவில்லை. பனிப்போரோ, சுடும் போரோ எதுவுமே வேண்டாம்’ என்று ரஷ்ய மொழியிலேயே சமாதானம் பேசிப் பார்த்தார் ஜெலன்ஸ்கி. அதையும் தாண்டி ரஷ்யா போரை ஆரம்பித்தபோது, “நாங்கள் கோழைகள் அல்ல, எங்களைத் தாக்கும்போது எங்கள் முதுகைப் பார்க்க மாட்டீர்கள், முகத்தையே பார்ப்பீர்கள்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் ஜெலன்ஸ்கி.
அதன் விளைவு தான், தற்போது வரை உக்ரைன் உக்கிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறது. ‘நாளை என்ன நடக்கப் போகிறது’ என்ற மனநிலையில் தான் உக்ரைன் மக்கள், நாட்களைக் கடத்தி வருகின்றனர்.
மற்றொருபுறம், பெருமளவிலான போர் செலவால் ஏற்கெனவே தளர்ந்து போயுள்ளது ரஷ்யா. போர்க் குற்றங்களுக்காக அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் வழங்கியுள்ளது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். இருந்தும் இரு நாட்டுத் தலைவர்களின் ஈகோவினால் இப்போது வரை தொடர்ந்து வருகிறது ரஷ்யா – உக்ரைன் போர். இது எப்போது முடிவுக்கு வரும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 02, 2025 11:20 AM IST
Zelensky vs Trump | உலகமே அதிர்ச்சியில் பார்த்த ‘அதிபர்கள் சண்டை’ – அப்படி என்ன பேசினார்கள்? – முழு பின்னணி!

