Last Updated:
அமெரிக்கா கனிமவள ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழுத்தம் கொடுத்ததாக கேள்வி எழுந்துள்ளது. ஜெலன்ஸ்கி, டிரம்ப், ஜேடி வேன்ஸ் விவாதம் நடந்தது.
கனிமவள பகிர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கேள்வி எழுந்துள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வேன்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடையே காரசார விவாதங்கள் நடந்தன. அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கனிமவள பகிர்வு ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வேன்ஸ் ஆகியோருடன் வார்த்தைப் போர் முற்றியதை அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.
அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, டிரம்புடனான வாக்குவாதம் இரண்டு தரப்புக்குமே உகந்ததல்ல என்றும், அமெரிக்காவின் பண உதவிக்காக ரஷ்யா மீதான நிலைப்பாட்டில் உக்ரைனுக்கு எந்த மாறுதலும் இல்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா முன்வைத்த கனிம வள பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டார். இதனிடையே கனிம வளத்தை பகிர்ந்து கொள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைனிடம் டைட்டானியம் மற்றும் யுரேனியம் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளதால் அதன் மூலமாக கிடைக்கக் கூடிய வருவாயின் 50 சதவீதத்தை மறுசீரமைப்புக்கான கூட்டு நிதியாக அமெரிக்காவுடன் இணைந்து வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஒப்பந்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டால், உக்ரைன் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அரிய வகை கனிமங்கள் அதிகம் இருக்கக்கூடிய கிழக்கு பகுதி ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ளதால், போர் நிறுத்தத்திற்குப் பின் ரஷ்யா வெளியேற மறுத்தால் அந்த கனிமங்களை உக்ரைன் உரிமை கொள்வதில் சிக்கல் எழும் எனக் கூறப்படுகிறது. மேலும் மீதம் உள்ள கனிமத்தால் கிடைக்கும் வருவாயிலும் அமெரிக்காவுக்கு பங்களிக்க வேண்டும் என்பதால் உக்ரைன் பொருளாதார நெருக்கடிக்கு செல்ல நேரிடும் எனக் கருதப்படுகிறது.
போர் நடத்த வழங்கிய நிதிகளுக்கு ஈடாக 500 பில்லியன் டாலர்கள் தரவேண்டும் என உக்ரைனுக்கு அமெரிக்கா தெரிவித்து இருந்த நிலையில் அதை இதன் மூலம் ஈடுசெய்ய திட்டமிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவின் செலவைக் கட்டுப்படுத்தவே போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டுவதாக பேராசிரியர் கிளாட்சென் சேவியர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போர் இன்னும் நிறைவு பெறவில்லை என அவர் தெரிவித்தார்.
Chennai,Tamil Nadu
March 02, 2025 9:21 AM IST
அமெரிக்கா – உக்ரைன் அதிபர்கள் மோதல் பின்னணி.. ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் தரும் டிரம்ப்.. ஏன்?


