Last Updated:
ஆப்கானிஸ்தானை விடவும் கூடுதல் நெட் ரன் ரேட் பெற்றதால் தென்னாப்பிரிக்கா அணி போட்டி முடிவதற்கு சில ஓவர்களுக்கு முன்னரே அரையிறுதி சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி சுற்றையும் உறுதி செய்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி செமி பைனலை உறுதி செய்துள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி முன்னேறும் என்பதில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே போட்டி காணப்பட்டது.
இதில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் அரையிறுதி சுற்றை முடிவு செய்யும் வகையில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் 2 புள்ளிகளை பெற்றிருக்கும். ஆனால் அதிக நெட் ரன் ரேட் பெற்றுள்ள அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 38.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜோ ரூட் 37 ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 25 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்க்கோ ஜான்சன் மற்றும் முல்தார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதை அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 27 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த வாண்டர் டசன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் இணை அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
இந்த வீரர்கள் மூன்றாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 29.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க – Champions Trophy : அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி..
வாண்டர் டசன் 72 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். கிளாசன் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதி சுற்றை மிக எளிதாக தென்னாப்பிரிக்கா அணி உறுதி செய்தது ஆப்கானிஸ்தானை விடவும் கூடுதல் நெட் ரன் ரேட் பெற்றதால் தென்னாப்பிரிக்கா அணி போட்டி முடிவதற்கு சில ஓவர்களுக்கு முன்னரே அரையிறுதி சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது.
March 01, 2025 9:00 PM IST


