Last Updated:
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அவுட் ஆன போது உற்சாகத்தில் அச்சிறுவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக தெரிகிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய ஒரே காரணத்துக்காக போலீசார் குடும்பதோடு கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வான் என்ற இடத்தில் கடை வைத்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் ஹமீதுல்லா கான். இவரது மனைவி ஆயிஷா. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது இவர்களின் 14 வயது மகன் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அவுட் ஆன போது உற்சாகத்தில் அச்சிறுவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக தெரிகிறது. அப்போது, அந்த வழியாக இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த சச்சின் வரத்கர் என்பவர் சிறுவனின் இந்த உற்சாகக் குரலைக் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அவர் சிறுவனின் இந்த கோஷத்தைக் கேட்டதும் கொந்தளித்திருக்கிறார். சிறுவன் அந்தப்பக்கமாக கோஷமிட்டபடி ஓடியதைப் பார்த்துள்ளார் சச்சின் வரத்கர். இதனைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த வழியாக மீண்டும் வந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பிடித்த அவர், எப்படி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பலாம் எனக் கேள்வி எழுப்பி கண்டித்திருக்கிறார். மேலும் சிறுவனை அவரது பெற்றோரிடம் அழைத்துச் சென்று தேசவிரோத கோஷங்களை எழுப்புகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து.. மளமளவென பரவிய நெருப்பால் பரபரப்பு!
உடனே தனது செல்போன் மூலமாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரை தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார். அதன்படி 50க்கும் மேற்பட்டோர் அந்தஇடத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சச்சின் வரத்கர் கொடுத்த புகாரின் பேரில் மால்வன் போலீசார் அந்த குடும்பத்தினருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டான். சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதோடு மட்டுமல்லாமல் சிறுவனின் பெற்றோர் நடத்தி வந்த இரும்புக் கடையை நகராட்சி நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் சிறுவன் கோஷமிட்டதற்காக உள்ளாட்சி நிர்வாகம் இதுபோன்று புல்டோசர் மூலம் கடையை இடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் நோட்டீஸ் கூட கொடுக்காமல் இடித்துத் தள்ளியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடையை இடிக்கும்போது, சிறுவனின் தந்தை இரும்பை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தி வந்த வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. போலீஸார் இவ்விவகாரத்தில் எந்த வித விசாரணையும் நடத்தாமல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாக கைது செய்யப்பட்ட குடும்பத்தினரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டி இருக்கிறார். இதனிடையே சிறுவனின் பெற்றோருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கிய நீதிமன்றம், சிறுவனை அவரது மாமாவிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
February 28, 2025 2:30 PM IST
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவில் கோஷம்… சிறுவன் குடும்பத்துக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. என்ன நடந்தது?


