Last Updated:
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள் போட்டிக்காக தயாராக தொடங்கியுள்ளன.
இந்த தொடருடன் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில் நேற்று விமான நிலையம் வந்த தோனி தனது டி-ஷர்டில் பதில் அளித்து இருந்தார். மோர்ஸ் கோடு முறையில் எழுதப்பட்டிருந்த அந்த டீசர்டில் இடம் பெற்றுள்ள வசனங்கள் “ஒன் லாஸ்ட் டைம்” என்று குறிப்பிட்டு இருந்தன.
இதன் மூலம் இந்த போட்டியுடன் தோனி விடைபெறுகிறாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், பின்னொரு பக்கம் ஐபிஎல் தொடருக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சென்னை அணியின் சில வீரர்கள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
43 வயதாகும் தோனி சமீபத்தில் ராஞ்சி மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு இருந்தார். கிரிக்கெட் பயிற்சியோடு டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் தோனி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஐபிஎல் தொடரை தவிர்த்து மற்ற அனைத்து போட்டி தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ். தோனிக்கு ஸ்பெஷலான பேட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த பேட்கள் அவர் வழக்கமாக பயன்படுத்தும் பேட்டை விடவும் 20 கிராம் வரை குறைவாக இருக்கும். இந்த பேட்கள் உத்திரபிரதேச மாநிலம் மிரட்டிலிருந்து சென்னைக்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 4 பேட்கள் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக தோனி பயன்படுத்தும் பேட்கள் 1250 கிராம் முதல் 1300 கிராம் வரை இருக்கும். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் எடை குறைவான பேட் பயன்படுத்த பயன்படுத்துவது குறித்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.
February 27, 2025 3:56 PM IST


