Last Updated:
மகாராஷ்டிராவில் பேருந்துக்குள் வைத்து இளம் பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் பேருந்து நிலையத்தில் ஊருக்கு வழி தெரியாமல் நின்றிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?
காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில், பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில், 26 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த அவலத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.
நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில், அதிகாலை நேரத்தில் இளம்பெண் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அவரின் அருகே வந்த இளைஞர் ஒருவர் எங்கே செல்ல காத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு, அந்த பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதைக் கேட்டதும், பல்தான் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தை காட்டுகிறேன் என கூறியுள்ளார். அங்கு மின்விளக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இளைஞர் மீது லேசாக சந்தேகம் கொண்ட இளம்பெண், பேருந்தில் ஏன் லைட் எரியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு, உள்ளே அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பதால் லைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதை நம்பி அப்பாவி பெண், பேருந்து நிலையத்தில் ஆள் நடமாட்டமே இல்லாத பேருந்திற்குள் ஏறியுள்ளார். அவரை பின்தொடர்ந்த நபர், திடீரென பேருந்தின் கதவை அடைத்துள்ளார். பின்னர், பேருந்துக்குள் வைத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர், தத்தாத்ரேய ராம்தாஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் உள்ளது. அப்படி இருந்தும், பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து உத்தவ் தாக்கரே தரப்பு, சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அவர்கள் ஸ்வர்கேட் பேருந்து நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மேலும், குற்றவாளியின் அடையாளம் தெரிந்தும், உடனடியாக கைது செய்யப்படாததை கண்டித்து பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். மகாராஷ்டிராவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சிக்குவாரா? அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சில தினங்களில் தெரியவரும்.
Pune (Poona) [Poona],Pune,Maharashtra
February 27, 2025 8:51 AM IST
பேருந்துக்குள் அரங்கேறிய கொடூரம்.. காவல்நிலையம் மிக அருகில் இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.. நடந்தது என்ன?


