நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது இன்று வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளதாக சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்றும் நாலக ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.
தாதியர் சேவைக்கு பாரிய அநீதி
வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர்.

தமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் எனவும் தாதியர் சங்கங்கள் கோரியுள்ளன.
தமது பல்வேறு கொடுப்பனவு முறைகளும், மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவு முறைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை உடனடியாக அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இன்று (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.
நாங்கள் தொடர்ச்சியாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும் நோயாளர்களின் பாதுகாப்பை யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியமையால், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

