Last Updated:
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்று நடைபெறும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இப்ராஹிம் ஜத்ரான் 50-வது ஓவர் வரை களத்தில் நின்று 177 ரன்கள் குவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. இந்நிலையில் குரூப் பி பிரிவில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி அதில் தோல்வி அடைந்துள்ளன.
இந்நிலையில் முதல் வெற்றியை யார் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த ஆட்டம் தற்போது லாகூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 6 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த செரிக்குல்லா அத்தல், ரஹ்மத் தலா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
கேப்டன் ஷாகிதி ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 40 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஸ்மதுல்லா 41 ரன்களும் அனுபவ வீரர் முகமது நபி 40 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய இப்ராஹிம் ஜத்ரான் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியவாறு இப்ராஹிம் விளையாடிய விதம் பலரையும் கவர்ந்தது. முதல் ஓவரில் களமிறங்கிய அவர் 49.1 ஓவர் வரை விளையாடி 146 பந்துகளில் 6 சிக்ஸர் 12 பவுண்டரியுடன் 177 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க – பிரபல கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சொந்தமான 7 ஆடம்பர வீடுகள்!
50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.
February 26, 2025 7:38 PM IST


