Last Updated:
டெல்லியின் ஆம் ஆத்மி அரசின் சுகாதார கட்டமைப்பில் அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாகத்தில் பெரும் குறைபாடுகள் உள்ளன என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
டெல்லியின் ‘ஹெல்த் மாடல்’ எனப் புகழப்படும் ஆம் ஆத்மி அரசின் சுகாதார கட்டமைப்பு மற்றும் சேவைகள் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. மொஹல்லா சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரை, அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாகத்தில் பெரும் குறைபாடுகள் இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சி.என்.என் – நியூஸ்18க்கு கிடைத்த தகவலின்படி 21 ஆம் ஆத்மி மொஹல்லா சுகாதார நிலையங்களில் கழிவறைகளும், 15 சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டர்களும், 6 சுகாதார நிலையங்களில் பரிசோதனை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதேபோல், 12 ஆயுஷ் மருந்தகங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியும், 17 மருந்தகங்களில் ஜெனரேட்டர்களும், 7 மருந்தகங்களில் கழிவறைகளும், 14 மருந்தகங்களில் குடிநீர் வசதியும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. கரோனா காலத்தில் பெறப்பட்ட ரூ. 787.91 கோடி நிதியில், வெறும் ரூ. 582.84 கோடி மட்டுமே செலவிடப்பட்டதும் தெரியவந்துள்ளது.
2016-2017 முதல் 2020-2021 காலகட்டம் வரை அரசு மருத்துவமனைகளில் 1,357 படுக்கை வசதிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிக படுக்கை வசதிகள் இல்லாததன் காரணமாக ஒரே படுக்கையில் இரு நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதும், சில சமயங்களில் நோயாளிகள் தரையில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு… ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது” – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
டெல்லியில் உள்ள 27 மருத்துவமனைகளில், 14 மருத்துவமனைகளில் ஐசியூ சேவைகளும், 16ல் ரத்த வங்கிகளும், 8ல் ஆக்சிஜன் சப்ளையும், 15ல் பிணவறை சேவைகளும், 12 மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவைகளும் இல்லை என்று பல்வேறு விஷயங்கள் சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த சிஏஜி அறிக்கை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டு, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி அப்போதைய டெல்லி அரசான ஆம் ஆத்மியிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
February 25, 2025 9:20 PM IST
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சுகாதார நிலையங்கள்.. சிஏஜி அறிக்கையில் தெரியவந்த டெல்லி ‘ஹெல்த் மாடல்’ குறைபாடுகள்


