8 அணிகள் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுகிறது. இவை குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டியிலுமே தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இருப்பினும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேராக இந்த தொடரில் இன்னும் மோதவில்லை. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் தலா ஒரு போட்டிகளில் மோதியுள்ளது. இவற்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களில் இருக்கின்றன. இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இவை தான் விளையாடிய ஒரு போட்டியில் தோல்வி அடைந்து மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவு
பி பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடும். இவற்றில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். தற்போதைய சூழலில் ஒரு போட்டியில் விளையாடி அதில் தோல்வி அடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி – 2.140 நெட் ரன்ரேட் உடன் நான்காம் இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.
நெட் ரன் ரேட்
இதேபோன்று இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியில் விளையாடி தோல்வி அடைந்து – 0.475 நெட் ரன்ரேட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் நெட் ரன்ரேட் அபாரமாக உள்ளது. ஆஸ்திரேலியா +0.475 நெட் ரன் ரேட்டையும், தென்னாப்பிரிக்கா +2.140 நெட் ரன் ரேட்டையும் கொண்டுள்ளன. இரு அணிகளும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும்.
இன்று முக்கியமான ஆட்டம்
இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி பெரும்பாலும் அரை இறுதிக்கு முன்னேறும். தற்போதைய சூழலில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளே அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளன.
இங்கிலாந்துக்கான வாய்ப்பு
இன்னொரு பக்கம் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்து, மார்ச் 1 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். அதே நேரம் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காக்கு எதிரான 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.
இதையும் படிங்க – முகமது ஷமி, ரோகித் சர்மாவுக்கு காயம்..? – ஷ்ரேயஸ் ஐயர் கொடுத்த முக்கிய அப்டேட்
ஆஸ்திரேலியாவின் நிலை
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியுடன் போட்டி உள்ளது. இன்றைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த வகையில் இன்று நடைபெற உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
February 25, 2025 12:55 PM IST

