டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட்டிலும் ஜாம்பவானாக வலம் வரும் விராட் கோலி, சில காலமாக பெரிய அளவில் ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்த நிலையில், நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 51வது சதத்தை பதிவு செய்தார். முக்கியமான ஆட்டத்தில், தனது திறமையை பறைசாற்றி “கிங் கோலி” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தப் போட்டியில், 15-ஆவது ரன்னை எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 3-ஆவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
சச்சின், சங்கக்கராவுக்குப் பிறகு இந்த மைல் கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். 350 ஆட்டங்களில் சச்சின் எட்டிய 14 ஆயிரம் ரன்களை, அவரை விட அதிவேகமாக, 287-ஆவது ஆட்டத்திலேயே எட்டிப்பிடித்து வரலாறு படைத்துள்ளார். இந்தப் போட்டியில், நசீம் ஷா கொடுத்த கேட்சை பிடித்த விராத் கோலி, இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இல்லாமல், பீல்டராக அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். மேலும், இதுவரை, எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையாக, ஐசிசி நடத்தும் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5-ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார். இப்படி பல சாதனைகளை நேற்றைய ஒரு சதத்தின் மூலம் விராட் கோலி படைத்திருக்கிறார்.
ஆனால், உண்மையில் விராட் கோலி அரைசதம் கடக்கும் முன்பாகவே, ஒரு சிறிய கவனக்குறைவால் விதிகளின்படி அவுட் ஆக வேண்டியது. அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்ததால், அவ்வாறு நடக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் யாரேனும் அப்பீல் செய்திருந்தால் விராட் கோலி அரை சதம் அடிக்கும் முன்பாகவே அவுட். எப்படி தெரியுமா?
என்ன நடந்தது?
ஹாரிஸ் ரவூஃப் 21வது ஓவரின் 4ம் பந்தில் பவுண்டரி அடித்த விராட் கோலி, அடுத்த பந்தில் கவர் பாயிண்ட் திசையில் சிங்கிள் எடுத்திருப்பார். பீல்டர் அருகில் இருந்ததால் விரைவாக அந்த சிங்கிளை எடுத்திருப்பார். பீல்டரும் விராட் கோலியை அவுட் செய்யும் நோக்கில் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிவார். ஆனால், விராட் கோலி க்ரீஸை அடைந்தவுடன் பீல்டர் எறிந்த அந்தப் பந்தை பிடிக்க முயல்வார். Obstructing the Field அல்லது மைதானத்தில் தடங்கல் ஏற்படுத்துதல் என்கிற விதிப்படி பீல்டர் த்ரோ செய்த பந்தை விராட் கோலி தடுத்தது தவறு.
ஒரு பேட்ஸ்மேன், வேண்டுமென்றே வார்த்தை அல்லது செயலால் பீல்டிங் அணியை தடுக்க அல்லது திசைதிருப்ப முயன்றால் மைதானத்தில் தடங்கல் ஏற்படுத்தியதாக அவருக்கு அவுட் கொடுக்கப்படலாம் என்பது தான் அந்த விதி. MCC கிரிக்கெட் சட்டத்தில் 37வது விதியான Obstructing the Field உள்ளது.
ஒரு பேட்ஸ்மேன் ஓடும்போது வேண்டுமென்றே தனது போக்கை மாற்றினாலோ, அல்லது ஒரு பீல்டர் ஸ்டம்பை நோக்கி வீசிய பந்தையைத் தடுக்க முற்பட்டாலோ அப்பீல் செய்யலாம். அப்பீல் செய்யப்பட்டால் பேட்ஸ்மேனின் நடவடிக்கை வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதை அம்பயர் தீர்மானிப்பார். ஒருவேளை வேண்டுமென்றே பேட்ஸ்மேன் பந்தை தடுத்தது உறுதியானால் அவுட் கொடுக்கப்பட வாய்ப்புண்டு. இதில் பீல்டர் எறிந்த பந்து ரன் அவுட்டை ஏற்படுத்தவிட்டால் கூட பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்படலாம். அப்படியாக அவுட் ஆகும் விக்கெட் பௌலர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது என்பதே விதி.
விராட் கோலி நேற்று கவனக்குறைவாக செய்தாலும் இந்த விதிகளின்படி அவர் அவுட் ஆக வாய்ப்பிருந்தது. நல்லவேளையாக எந்த ஒரு பாகிஸ்தான் வீரர்களும் அம்பயரிடம் அப்பீல் செய்யவில்லை. ஒருவேளை செய்திருந்தால் விராட் கோலி சதம் மட்டுமல்ல, அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் இழந்திருப்பார். ஏனென்றால், அந்த ஓவர் வரை விராட் 41 ரன்களே எடுத்திருந்தார்.
இதனை அப்போதே வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டி, கோலி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, ”இவ்வாறு செய்ததற்காக பாகிஸ்தான் பீல்டர்களில் யாராவது மேல்முறையீடு செய்திருந்தால் கோலி ஆட்டமிழந்திருக்கலாம். யாரும் மேல்முறையீடு செய்யாதது அவருக்கு அதிர்ஷ்டம், விராட் கோலி இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 24, 2025 10:02 AM IST


