Last Updated:
சக்தி காந்த தாஸ் முன்னதாக ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றியவர்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்தி காந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரை சக்தி காந்த தாஸ் முதன்மை செயலர் பொறுப்பில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Former RBI Governor Shaktikanta Das, appointed as Principal Secretary-2 to Prime Minister Narendra Modi. pic.twitter.com/uUWt7SfLjj
— ANI (@ANI) February 22, 2025
தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக சக்தி காந்த தாஸ் பொறுப்பில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியாக சக்தி காந்த தாஸ் பொறுப்பில் இணைந்தார். இவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் ஆகும். தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் பல்வேறு பொறுப்புகளை சக்தி காந்ததாஸ் வகித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியாளராக இவர் பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து தொழில்துறை முதன்மைச் செயலர், வருவாய்த்துறை சிறப்பு ஆணையர், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்ட பல பொறுப்புகளும் இவர் தமிழ்நாட்டில் வகித்துள்ளார்.
பின்னர் மத்திய பணிகளுக்கு திரும்பிய சக்தி காந்ததாஸுக்கு பொருளாதாரம் மற்றும் நிதி துறையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர், மத்திய வருவாய்த்துறை செயலாளர், மத்திய உரத்துறை செயலர், பொருளாதார விவகாரங்களுக்கான சிறப்பு செயலர், மத்திய நிதித்துறையின் செலவினத்திற்கான இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட கையாண்டவர் சக்தி காந்த தாஸ்.
2014 ஜூன் மாதம் இவரை மத்திய வருவாய் துறை செயலாளராக பிரதமர் மோடி தலைமையிலான குழு நியமித்தது. மத்திய அரசு பணமதிப்பிழப்பு செய்த காலகட்டத்தில் சக்தி காந்ததாஸ் தான் பல்வேறு முறை ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து வந்தார்.
இந்தியாவின் மிகவும் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் பொறுப்பையும் சக்தி காந்ததாஸ் வகித்துள்ளார்.
இவ்வாறு நிதித்துறை மற்றும் பொருளாதார துறையில் ஏராளமான பொறுப்புகளை வகித்த பின்னர் அவர் கடந்த 2018 டிசம்பர் 11ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகளில் அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் பொறுப்பு வகிப்பார் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
February 22, 2025 5:54 PM IST


