Last Updated:
அரசியல்சாசனத்தின்கீழ் ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், வழக்கில் அனைத்து தரப்பும் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமைச்சரவை முடிவின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றும், தனிப்பட்ட முடிவுகளை ஆளுநர் எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 200-ஆவது பிரிவில் குறிப்பிட்டுள்ள “discretion” என்ற வார்த்தை ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்தைக் குறிப்பதாகவும், ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்துவிட்டது என அர்த்தம் என்றும் ஆளுநர் தரப்பில் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இனி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை – வெளியானது புதிய அறிவிப்பு
காலாவதியான மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிரான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரையறை எதுவும் கிடையாது என்றும் ஆளுநரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
February 22, 2025 6:56 AM IST


